ஐசுவரியம் வீழ்த்தும்
தியானம்: 2026 மார்ச் 10 செவ்வாய் | வேத வாசிப்பு: 1தீமோத்.6:6-11

ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் … பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் (1தீமோத்தேயு 6:9).
தான் தொட்டதெல்லாம் பொன்னாக மாறவேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு அரசன், சாப்பிடுவதற்காக சாப்பாட்டைத் தொட்டவுடன் அது பொன்னாக மாறியதாலும், தண்ணீரைக் குடிப்பதற்குத் தொட்டவுடன் அது பொன்னாக மாறியதாலும் பட்டினியால் மடிந்துபோனதாக ஒரு சிறுகதையைப் படித்த ஞாபகம் இப்போது வருகிறது.
தேவைக்குப் பணம் சம்பாதிப்பதை விடுத்து, தாங்கள் ஐசுவரியவான்களாக மாறவேண்டும் என்று, அளவுக்கு அதிகமாக ஆசை வைத்து, பணத்தைச் சம்பாதிக்க ஓடுவோர் அநேகர். “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” என்கிறது வேதவார்த்தை. ஆனால், இன்று போதுமென்கிற மனம் நம்மில் யாரிடத்தில் உண்டு? எங்கெல்லாம் கிடைக்கிறதோ அவையெல்லாவற்றையும் வாரிச் சுருட்டி எடுப்பதிலேயே நமது மனம் நாட்டங்கொள்ளுகிறது.
அன்று வனாந்தரத்தில் உணவு இல்லாமல் தவித்தவேளையில் மன்னாவைக் கொடுத்த தேவன், அந்தந்த நாளுக்கு அளவாக மன்னாவைச் சேர்த்துக்கொள்ளும்படிக்கு கட்டளை கொடுத்தார். அப்போது போதுமென்கிற மனதை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். “அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். உண்ணவும் உடுக்கவும் உண்டாயிருந்தால் அது போதுமென் றிருக்கக்கடவோம்” என்று நமது ஆண்டவராகிய இயேசுவும் கற்றுக் கொடுத்தார். இவைகள் எல்லாம் எதற்காக? நாம் போதுமென்கிற மனதுடனேகூட திருப்தியாக வாழுவதற்காகவேதான் என்பதை உணர்ந்திருக்கிறோமா?
பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதியபோது, ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையில் அகப்படுவார்கள் என்கிறார். அளவுக்கு மிஞ்சி நாம் ஐசுவரியத்தில் நாட்டங்கொண்டால், அதைச் சம்பாதிப்பதற்காக நாம் எந்த எல்லைக்கும் போகத் தயங்கமாட்டோம். அதனாலே சோதனையில் அகப்படுவோம்; பாவத்திலும் விழுந்து போவோம். எனவே, எச்சரிப்போடு நடந்துகொள்வோம்.
இந்த தபசு நாட்கள் நம்மை சுய ஒறுப்பைச் செய்ய ஊக்குவிக்கிறது. சுயத்தை ஒறுத்து, அதைக் காணிக்கையாகக் கொண்டுபோய் ஆலயங்களில் ஒப்படைக்கும்படிக்கு நாம் வேண்டப்படுகிறோம். அது எதற்காக? அளவுக்கு மிஞ்சியவைகளில் நாட்டங்கொள்வதைத் தவிர்ப்பதற்காகவேயாகும். “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம்” (1தீமோத்தேயு 6:6).
ஜெபம்: எங்கள் நல்ல ஆண்டவரே, அனுதினமும் எங்கள் படியை அளந்து எங்களைப் போஷியும். அளவுக்கு மிஞ்சின காரியங்களில் நாங்கள் நாட்டங்கொள்ளாதபடி மன ரம்மியமாய் நடந்துகொள்ள எங்களுக்கு உதவும். ஆமென்.