மறைவான குற்றம்

தியானம்: 2026 மார்ச் 23 திங்கள் | வேத வாசிப்பு: சங்கீதம் 19:1-14

YouTube video

தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும் (சங். 19:12).

இரண்டு பிள்ளைகளையும் வீட்டில் விட்டுவிட்டு பெற்றோர் சற்று வெளியில் சென்றுவிட்டனர். சிறிய தம்பி பந்தை எறிந்ததில் அங்கிருந்த அழகிய ஒரு சிற்பம் விழுந்து உடைந்துவிட்டது. இதைக் கண்டு பயத்தினால் தம்பி அலறினான். அக்காவோ, அழவேண்டாம், நாம் இதை மறைத்து வைத்து விடுவோம் என்று அவனுக்குத் தைரியம் சொன்னாள். இருவருமாகச் சேர்ந்து அதை மறைத்துவிட்டு, பெற்றோர் வந்ததும் ஒன்றும் நடவாததுபோல இருந்துவிட்டனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தம்பி ஏதாவது அக்காவோடு முரண்படும்போதெல்லாம், அவள் இந்தக் காரியத்தைப் பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என்று கூறி அவனை மிரட்டுவாள். இதனால் அந்த தம்பி ஒன்றும் செய்ய இயலாதவனாக கூனிக் குறுகி அக்கா சொல்வதையெல்லாம் செய்து கொண்டே இருப்பான். இதுபோலவே, மறைவான குற்றங்கள் நம்மை நிம்மதியோடு இருக்கவிடாது. அதைச் செய்யும்போது இனிமையாக இருக்கலாம், நமக்குப் பிடித்த காரியம் என்று எண்ணியிருக்கலாம். ஆனால், செய்த பின்னர் தவறு செய்துவிட்டோமே என்ற உறுத்துதல் நம்மை நிம்மதியிழக்கச் செய்து விடும். இங்கே சங்கீதக்காரர், தேவனுடைய கரத்தின் கிரியைகளைக்குறித்து சொல்லிக்கொண்டு வருகிறார். அதன் பின்னர் அவரது வார்த்தையின் மகத்துவத்தை இந்தச் சங்கீதத்திலே பாடுகிறார். கர்த்தருடைய வேதம் குறைவற்றது, ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது, பேதையை ஞானியாக்குகிறது, கண்களைத் தெளிவிக்கிறது, பசும்பொன்னிலும், விரும்பப்படத்தக்கது, தேன்கூட்டில் இருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளது என்கிறார்.

இப்படிப்பட்ட வார்த்தையினால் நான் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுவதால் மிகுந்த பலனுண்டு என்றவர், மறைவான குற்றங்களுக்கு என்னை விலக்கிக் காரும் என்று ஒரு வேண்டுதலை முன்வைப்பதைக் காண்கிறோம். இன்று நாம் வாழும் காலகட்டத்தில் எது குற்றம், எது குற்றமில்லை என்று தெரிந்துகொள்ள முடியாதபடிக்கு எல்லாமே இரண்டறக் கலந்த ஒரு காலமாய் உள்ளது. இதிலே தேவனுடைய வார்த்தை நம்மை எச்சரித்து, காக்க வல்லமையுள்ளதாய் இருக்கிறது. அதேவேளை எவருக்கும் தெரியாமல் அந்தரங்கத்தில் செய்யும் பாவங்கள், அல்லது நினைவிலே செய்யும் பாவங்களையும் குறித்து நம்மை எச்சரித்து உணர்த்துகிறதாயும் இருக்கிறது. பிறருக்குத் தெரியாமல் நான் எதையும் மறைத்துப் போடலாம், ஆனால் தேவனுக்கு முன்னால் அது முடியுமா? சங்கீதக்காரர் வெளிவேஷமான வாழ்வையல்ல; உண்மைத்துவமான ஒரு வாழ்வை வாழவே பிரயாசப்படுகிறார். “துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்.” சங்கீதம் 19:13.

ஜெபம்: பரிசுத்தமுள்ள ஆண்டவரே, அனுதினமும் வேதவசனங்களை நாங்கள் தியானிக் கையில் கர்த்தருடைய வார்த்தையால் எச்சரிக்கப்பட்டு நடத்தப்பட ஜெபிக்கிறோம். ஆமென்.