நிறைவேறினால் நிறைவேறும்!
தியானம்: 2026 மார்ச் 29 ஞாயிறு | வேத வாசிப்பு: மத்தேயு 21:1-9

… திரளான கூட்டமாகிய ஜனங்கள் … தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, … ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன் (வெளி. 7:9).
இது ஒரு வெற்றிப் பவனி. அப்படியானால் ஒரு ராஜா குதிரையில் அல்லது தேரில் போர்வீரர் புடைசூழ பெருமிதத்துடன் வரவேண்டும். ஆனால், இந்த ராஜா ஒரு கழுதைக்குட்டியின் மீது ஏறி, மக்கள் புடைசூழ, “ஓசன்னா” என்ற மக்களின் ஆர்ப்பரிப்பின் சத்தத்துடன் எருசலேமுக்குள் வருகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்தச் சம்பவம், அது நிறைவேறுவதற்கு ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் சகரியாவினால் உரைக்கப்பட்டது என்பதைக் கவனிக்கவேண்டும் (சக.9:9). அப்படியானால் சகலத்தையும் முடித்தவரான ராஜாதி ராஜாவினது இரண்டாவது வருகையும் நிச்சயம் நிறைவேறுமல்லவா!
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதை கொண்டாடும் நினைவுகூரும் பஸ்கா பண்டிகைக்காக சகல இடங்களிலுமிருந்து வந்த யூதர்கள் எருசலேமில் நிறைந்திருந்த அந்த தருணத்தையே இயேசு தமது பவனிக்காகத் தெரிந்தெடுத்திருந்தார். சகலருடைய கண்களும் அவரைக் கண்டது. “ஓசன்னா” என்றால் “இரட்சியும்” என்று அர்த்தமாம். ஆக, இயேசு தங்களுக்கு உலக ரீதியான ஒரு விடுதலையைப் பெற்றுத் தருவார் என்று அவர்கள் அன்று நம்பினார்கள். ஆனால், இயேசுவோ ஒரு கூட்டத்தாருக்கு அல்ல; முழு உலகத்துக்குமே நித்திய விடுதலை கொடுக்கும் இரட்சகராக வந்திருந்தார் என்பதை அறிந்திராத அவர்கள் அன்று அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். ஒரு விஷயத்தை நாம் இன்று மனதில் நிறுத்திக்கொள்வோம். நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது துல்லியமாக, அந்தப் பவனியில் நிறைவேறியது என்றால், “நான் சீக்கிரமாய் வருவேன்” என்றவரின் இரண்டாம் வருகையும் நிச்சயத்தில் நிச்சயமாய் நிறைவேறும். அதை நாம் அறிந்திருந்தாலும், அன்றைய யூதருக்கும் இன்றைய நமக்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா? “அந்த நாளிலே” திரள்கூட்டத்தார் வெள்ளை அங்கி தரித்து, கைகளில் வெற்றியின் அடையாளமான குருத்தோலையைப் பிடித்துக்கொண்டு மகா சத்தமிட்டு ஆர்ப்பரிப்பார்கள். அப்போ “ஓசன்னா” என்று அல்ல; “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக” என்று சொல்லியே ஆர்ப்பரிப்பார்கள். இவர்கள் யார்? அன்று கழுதையின்மீது வெற்றிப்பவனி வந்தவரும், சிலுவையில் வெற்றி சிறந்தவரும், மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தவருமாகிய இரட்சகரால் மீட்கப்பட்டவர்களே இவர்கள். இன்று குருத்தோலை பிடிக்கிற நாம், இயேசுவின் இரண்டாம் வருகையில் அவரைக் கொண்டாடும் கூட்டத்திலும் காணப்படுவோமா?
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, இதோ, சீக்கிரமாய் வருகிறேன் என்று வாக்குப் பண்ணியுள்ளீர். உமது வருகையிலே இராஜாதிராஜாவைக் கொண்டாடும்கூட்டத்தில் நானும் காணப்பட நான் ஆயத்தமாயிருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.