குமாரனில் வைத்த அன்பைப்போல…
தியானம்: 2026 ஏப்ரல் 1 புதன் | வேத வாசிப்பு: யோவான் 17:20-26

நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும் … வேண்டிக்கொள்ளுகிறேன் (யோவான் 17:23).
நம்மை தம்முடைய விசேஷித்த ஜனமாக தெரிந்துகொண்ட கர்த்தாதி கர்த்தர் இப்புதிய மாதத்திற்குள் அடியெடுத்து வைக்க உதவி செய்திருக்கிறார். நான் உன்னோடே இருந்து நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காப்பேன் (ஆதி.28:15) என்ற வாக்குப்படியே இம்மாதத்திலும் கர்த்தர் நம்மோடிருந்து நம்மை நடத்துவார்.
இந்தநாளின் வேதபகுதியில் சீஷர்களுடைய வார்த்தையினால் தம்மை விசுவாசிக்க இருப்பவர்களுக்காக இயேசு வேண்டிக்கொள்கிறார். அதாவது இன்று அவருடைய பிள்ளைகளாக்கப்பட்ட நம் எல்லோருக்காகவும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே இயேசு ஜெபித்துவிட்டார் என்பது நமது மனங்களை இந்த நாளில் உறுத்தட்டும். இப்படிப்பட்ட ஆண்டவரிடம் வீண் முறையீடுகளும், பிறருடன் பிரிவினைகளையும் ஏற்படுத்திக்கொண்டு நாம் வாழுவது தகுமா?
இந்த இறுதிப் பகுதியில் இயேசு, முக்கியமாக தமது பிள்ளைகள் எப்போதும் ஒன்றாயிருக்கவேண்டுமென்ற தமது பாரத்தை வெளிப்படுத்துவதைக் காணலாம். பிதாவாகிய தேவன் தமது குமாரனிலும், குமாரன் பிதாவுடன் ஒன்றாயிருப்பதைப்போல தம்முடைய பிள்ளைகளும் ஒன்றாயிருக்கவேண்டும் என்பதே இயேசுவுடைய ஆதங்கமாயிருந்தது. அதற்காகவே, பிதா குமாரனில் வெளிப்படுத்திய தமது மகிமையை குமாரன் தமது பிள்ளைகளுக்குக் கொடுத்ததாக ஜெபித்தார். அந்த மகிமை இன்று நம்மில் வெளிப்படுகிறதா? நமக்குள், அதாவது உறவுகளுக்குள் குடும்பங்களுக்குள் மாத்திரமல்ல, சபைக்குள், சபைகளுக்குள் இன்று காணப்படுகின்ற பிரிவினைகள் ஆண்டவரை எவ்வளவாகத் துக்கப்படுத்தும் என்பதை நம்மில் யாராவது உணருகிறோமா?
அடுத்த முக்கிய விஷயம், பிதாவாகிய தேவன் பாவிகளான நம்மில் எவ்விதமான அன்பு கொண்டிருக்கிறார் என்பதை இயேசுவின் ஜெபம் நமக்கு தெளிவாக இப்பகுதியில் வெளிப்படுத்தியிருக்கிறது. “நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும்” (வச.23); “நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும்” (வச.26). இப் பெரிய பாக்கியத்தைப் பெற்றிருக்கிற நாம் ஏன் அற்பத்தனமாக நடக்கவேண்டும். தமது குமாரனில் பிதா எவ்வளவு அன்பை வைத்திருக்கிறாரோ அதில் ஒரு பிசகும் இல்லாமல், அப்படியே நம்மிலும் அன்பு வைத்திருக்கிறார் என்றால், அதற்கு நாம் எம்மாத்திரம்?
இயேசுவின் இந்த முழு ஜெபமும் சுயநலம் இல்லாத ஒரு ஜெபம்; மாத்திரமல்லாமல், பிதாவை மகிமைப்படுத்துகிறதும், தம்முடையவர்கள் தலை நிமிர்ந்து வாழவேண்டுமென்றும் ஜெபித்த ஜெபம். இதற்கும் மேலாக, இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்னால் தேவனுடைய கிருபையால் தம்மை விசுவாசிப்பதற்கு இரக்கம் பெற்ற நமக்காகவும் நமது அன்பின் ஆண்டவர் ஜெபித்த ஜெபம் இது. இந்த ஆண்டவரை நாம் எவ்வளவுக்கு நேசிக்கிறோம்? நேசிக்கிறோம் என்றால் அவருடைய வார்த்தைக்கு எவ்வளவு தூரம் கீழ்ப்படிகிறோம்?
ஜெபம்: அன்பின் தேவனே உம்மை அதிகமதிமாக நேசிக்க உமக்குக் கீழ்ப்படிய என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.