அந்த ஒருவன்
தியானம்: 2026 ஏப்ரல் 2 வியாழன் | வேத வாசிப்பு: யோவான் 13:11-21

என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான் (யோவா.13:18).
வருடந்தோறும் கொண்டாடிய பஸ்கா பண்டிகை; ஆனால், இம்முறை ஆண்டவருக்கு இது மிக விசேஷித்ததாக இருந்தது. தம்முடைய நாட்கள் நெருங்கிவிட்டதை அறிந்த இயேசு, இப்பூமியிலே தம்முடையவர்களுடன் அருந்தும் கடைசி இராவிருந்தும் இதுதான் என்பதையும் அறிந்திருந்தார். போஜனத்தின் பின்னர் என்ன நடக்கும் என்பதையும் அறிந்திருந்த ஆண்டவர், ஆவியிலே கலங்கினார் (13:21) என்று பார்க்கிறோம். ஏன்? தாம் காட்டிக் கொடுக்கப்படப் போவதற்காகவா கலங்கினார்? இருக்காது! மூன்றரை ஆண்டுகளாக கூடவே இருந்தவன், ஒன்றாக அப்பம் புசித்தவன், இப்போ கேட்டின் மகனாகிவிட்டானே (17:12). அதற்காக அவர் அவனை வெறுக்கவில்லை. தமக்குரிய அநாதி திட்டத்தில் யூதாஸ் இருக்கிறதை இயேசு அறிவார். பிசாசு அவன் இருதயத்தைத் தூண்டிவிட்டதையும் அறிவார். இதையெல்லாம் அறிந்திருந்த இயேசு தம்மைக் காட்டிக்கொடுக்க வந்த யூதாஸைப் பார்த்து “சிநேகிதனே” (மத்.26:50) என்று அழைத்தபோதாவது யூதாஸ் உணர்வடைந்தானா?
யூதாஸ் தம்மைக் காட்டிக்கொடுப்பது நடந்தே தீரும் என்பதை அறிந்திருந்தும், அவனுக்கு இயேசு பல தருணங்களைக் கொடுத்திருந்தார். முதலில், “உங்களில் ஒருவன் காட்டிக் கொடுப்பான்” என்றார்; பின்னர் தம்முடன் அப்பம் புசிக்கிறவர்களில் ஒருவன் என்று அவனைக் குறிப்பிட்டார். மற்ற சீஷர்களுக்கு அவன் யார் என்பது தெரியாவிட்டாலும் யூதாசுக்கு அது தான்தான் என்பது நன்கு தெரியும். அப்போதாவது அவன் பயப்பட்டானா? “இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான்” என்றும் சொன்னார் இயேசு. அப்படிச் சொல்லி தோய்த்த துணிக்கையை யூதாஸின் கைகளிலே கொடுக்கிறார். அப்பொழுதுகூட யூதாஸ் உணர்வடையவில்லை. இறுதியில் “நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்” என்று சொன்னபோதாவது அவனுடைய மனது உடையவில்லை.
அநேக தருணங்கள் யூதாஸிற்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவனால் மனம்திரும்ப ஏன் முடியவில்லை? ஒன்றாய் உட்கார்ந்து போஜனம் அருந்திவிட்டு, பந்திக்குக் காரணரையே காட்டிக்கொடுத்த யூதாஸ்போல நாம் எவரும் இருக்கக்கூடாது. இன்றும் இயேசு நமக்காகச் செய்துமுடித்தவற்றை நினைவு கூரும் பரிசுத்த பந்தியில் மாதந்தோறும் பங்கெடுக்கிறோம். ஆனால், நமது வாழ்வில் அவருக்கு உண்மையாய் இருக்கிறோமா? தூய்மையான இருதயத்துடன் அவரைச் சேவிக்கிறோமா? சாத்தான் நம்மைச் சோதிக்க நிச்சயம் வருவான். ஆனால், நம்மை மீட்டு இரட்சித்த ஆண்டவருக்கு குதிங்காலைத் தூக்காதபடி விழிப்புடன் இருப்போமாக.
ஜெபம்: அன்பின் தகப்பனே, வேதவசனங்களினாலே நீர் எங்களை உணர்த்தும்போது, எங்களை நாங்கள் அறிந்துகொண்டு மனந்திரும்ப உதவி செய்யும். ஆமென்.