கண்கள் திறக்கப்படட்டும்!
தியானம்: 2026 ஏப்ரல் 10 வெள்ளி | வேத வாசிப்பு: லூக்கா 24:25-35

வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டார்கள் (லூக். 24:32).
உங்களை யார் என்று தெரியாமலே, உங்களைப் பற்றி உங்களிடமே யாராவது ஏதாவது சொல்லியிருக்கிறார்களா? நீங்கள்தான் என்று தெரியவரும்போது அவர்களின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும்! அல்லது, ஆளைத் தெரியாமல் பேசிவிட்டு, சங்கடப்பட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா? இந்த சீஷர்களுக்கும் இதுதான் நடந்தது.
“எருசலேமில் நடந்தது உமக்குத் தெரியாதா” என்று கேட்டவர்களிடம் இயேசுவும் எதுவும் தெரியாதவர்போல, “எவைகள்” என்று கேட்கிறார். சீஷர்களும், இயேசுவுக்கு நடந்தவற்றை அவருக்கே விவரிக்கிறார்கள். “அவரை நம்பியிருந்தோம்” என்றனர்; என்றாலும் கல்லறை வெறுமையாயிருக்கிறது என்றார்கள். அப்பொழுது இயேசு பேச ஆரம்பிக்கிறார். “தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே” என்று கடிந்துகொண்டு, தம்மைக்குறித்து வேத வாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிற அனைத்தையும் விவரிக்கிறார். அப்பொழுதும் அவர்கள் உணர்வடையவில்லை. அவர்கள் கேட்டுக்கொண்டபடி அவர்களுடன் சென்று பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்துப் பிட்டு அவர்களிடம் கொடுத்தபோதுதான் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டது என்று வாசிக்கிறோம். அவரை அறிந்துகொண்டபோது இயேசு மறைந்து போனார். ஆனால், வழியிலே இயேசு பேசியபோது, வேதவாக்கியங்களை விளக்கியபோது அவர்களுடைய இருதயம் அவர்களுக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்ததே என்பதை அப்போதுதான் அவர்கள் உணர்ந்தனர். கொழுந்துவிட்டு எரிந்தபோது அவர்கள் உணர்வற்றிருந்தது என்ன? இயேசு முன்னே நின்றும் அவர்கள் கண்கள் அவரைக் காணாததும் ஏன்? அவர் பேசியும் அவர்கள் காதுகள் கேட்காததும் ஏன்?
இதைத்தான் அன்று ஏசாயாவும், “காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக் கண்டும் அறியாமலும் இருக்கிறார்கள்” (ஏசாயா 6:9) என்றார். இயேசு எத்தனை அற்புதங்களைச் செய்தும், பரலோக ராஜ்யத்துக்கு அடுத்தவைகளைப் போதித்தும், தம்மை மீட்டு இரட்சிப்பவர் இவர்தான் என்று அவர்களால் உணரமுடியாதிருந்தது ஏன்? அன்றுதான் அப்படியென்றால் இன்று எத்தனை வேதப்படிப்புகள், மேற்படிப்புகள் என்று ஏராளமான விதங்களில் வேதவாக்கியங்கள் போதிக்கப்பட்டு வருகின்றன. நமது இருதயம் அப்பப்போ கொழுந்துவிட்டு எரிகிறதுபோல உணர்ந்தும், இன்று நாம் கண்கள் திறக்கப்பட்டவர்களாக, உணர்வடைந்தவர்களாக, நமது ஆண்டவர் ஜீவனோடிருக்கிறார் என்ற நிச்சயமுள்ளவர்கள்போல வாழுகிறோமா? இன்று என் கண்கள் திறவுண்டு வேதவெளிச்சத்தில் யாவையும் பார்க்கிறதா? சிந்திப்போம்.
ஜெபம்: தேவனே, வேதத்தின் இரகசியங்களையும், அதிசயங்களையும் புரிந்துகொள்ளும்படி எங்கள் மனக்கண்களைத் திறந்தருளும். ஆமென்.