தயை செய்தல்

தியானம்: 2026 ஏப்ரல் 25 சனி | வேத வாசிப்பு: 2சாமுவேல் 9:1-13

YouTube video

நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச்செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே (நீதிமொழிகள் 3:27).

பதவிகளும், அந்தஸ்துக்களும் உயரும்போது பழைய வாழ்வை மறந்து போவோரும், பெற்ற நன்மைகளை எல்லாம் ஒருகணத்தில் மறந்து போய், நன்மை செய்தோரையும் மறந்துவிடும் மனிதர்களும் வாழும் ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தாவீதோ, தனக்கு உயிர் நண்பனாய் இருந்த யோனத்தான் நிமித்தமாக தான் தயை செய்வதற்கு யாராவது உண்டா என்று தானே தேடித்தேடி உதவி செய்வதைப் பார்க்கிறோம். யோனத்தானின் மகனாகிய மேவிபோசேத்தை அவன் கண்டுபிடித்த போது, அவனுக்கு ஏதோவொரு உதவி செய்வோம் என்ற மனநிலையில் தாவீது உதவ முன்வரவில்லை. அவனுக்கு செய்யவேண்டியதையெல்லாம் சிந்தித்து, செய்து, தன்னோடு கூடவே நித்தமும் பந்தியிருக்கவும் செய்தார்.

மற்றவர்களுக்குத் தயை செய்வதினாலும், நன்மை செய்யத்திராணி இருக்கும்போது நன்மை செய்வதினாலும் தேவனுடைய அன்பினை மற்றவர்களுக்கு காட்டலாம். தாவீதின் பதவிகளும், ராஜ்ய மேன்மைகளும் அவன் விரும்பியோருக்குத் தயை செய்வதற்குத் தடையாக இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தாவீது, தனது உயர்நிலையை உபயோகித்து பல நன்மைகளைச் செய்ய முன்வந்ததை நாம் கவனிக்கவேண்டும். அதேபோல் நமது வாழ்விலும் அந்தஸ்துக்களோ, வேறு எந்த ஒரு காரியமோ மற்றவர்களுக்கும் உதவுவதற்கும், அவர்களுக்கு தயை செய்வதற்கும் தடையாக இருக்கக்கூடாது. இன்னும் அதிகமாக நாம் நன்மை செய்ய முன்வரவேண்டும்.

நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தாவியினாலும், வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார், தேவன் அவருடனே இருந்தபடியினால் அவர் நன்மை செய்கிறவராயும், பிசாசின் வல்லமையில் அகப்பட்டோரைக் குண மாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் (அப்.10:38). ஆண்டவர் நன்மை செய்கிறவராய் நமக்கொரு முன்மாதிரியை வைத்தார். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்றால், தேவன் நம்மோடு இருக்கிறார் என்பது உண்மை என்றால் எப்படி நன்மை செய்யாமல் இருக்கமுடியும்? நன்மை செய்ய நமக்குத் திராணியிருக்கும்போது அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்வோம். நன்மைசெய்து தயை காட்டுவதினால் நம்மில் இருக்கும் தேவஅன்பை பிறருக்குப் புரிய வைப்போம். தேவனின் கைகளிலிருந்து நன்மைகளைப் பெற்ற நாம் அதை மற்றவர் களுக்குக் காட்டுவது நமது தலைமேல் விழுந்த கடமையல்லவா.

பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி அதைப் பின்தொடரக்கடவன் (1பேது.3:11).

ஜெபம்: “நன்மையின் ஊற்றாகிய அன்பின் ஆண்டவரே, உம்மிடம் இருந்து நன்மைகளைப் பெற்ற நான் மற்றவர்களுக்கு நன்மை செய்து உமது அன்பை அவர்களுக்குக் காட்ட அருள் செய்யும். ஆமென்.”