பாவத்தின் விளைவு
தியானம்: 2026 ஏப்ரல் 29 புதன் | வேத வாசிப்பு: 2சாமுவேல் 12:15-25

அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடுதியில் நாசமடைவான்; (நீதி. 29:1).
நாம் எவ்வளவு கொடிய பாவிகளாய் இருந்தாலும், நாம் உண்மையாய் மனந்திரும்பி பாவமன்னிப்பு கேட்கும்போது, நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள ஆண்டவர் ஆயத்தம் உள்ளவராய் இருக்கிறார். ஆனால், நாம் செய்த பாவத்தின் விளைவுகளை நாம் சிலவேளைகளில் சந்தித்தே ஆகவேண்டும். இங்கும், தாவீது தனது பிழையை உணர்ந்தும், தேவன் அவரை மன்னித்தாலும், பாவத்தில் உருவான அந்தப்பிள்ளை சாகும் என்று தேவன் கூறிவிட்டார். ஆனால், அப்பிள்ளைக்காக தாவீது புசியாமல், குடியாமல் தேவனிடம் பிரார்த்தித்தவராக தரையிலே விழுந்துகிடந்தார் என்று வாசிக்கிறோம். ஆனாலும், அவரால் அந்தப் பிள்ளையை மீட்டுக்கொள்ள முடியவில்லை. ஏழாம் நாளிலே பிள்ளை செத்துப்போனது. தாவீது தன் பாவத்தின் விளைவுக்கு முகம்கொடுக்க வேண்டியதாயிற்று. அதற்காக தாவீது தேவனை குறை சொல்லவுமில்லை.
பாவத்தோடு விளையாடும் வாழ்வு நமக்கு வேண்டாம். வேதம் சொல்லுகிறது: அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றி சடிதியில் நாசமடைவான் (நீதி.29:1). நமது வாழ்வில் தேவனுக்கு விரோதமான பாவங்களையும், அவர் நமக்கு உணர்த்திய பாவ காரியங்களையும் விட்டுவிடுவோமாக. அதன்பின் விளைவுகள் நம்மைத் தொடர்ந்து பிடிக்குமானால் அதை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. அதற்கு முன்பு பாவத்தோடு விளையாடுவதை நிறுத்தி மனந்திரும்புவோம்.
இவ்விதமாக பாவத்தில் விழுந்த தாவீது, பிள்ளைக்காக தரையிலே விழுந்தார். எனினும் அவர் அப்படியே விழுந்துகிடக்கவில்லை. பிள்ளைசெத்ததும், அவர் தரையைவிட்டு எழுந்தார், ஸ்நானம் பண்ணினார், எண்ணை பூசிக் கொண்டு தன் வஸ்திரங்களை மாற்றிக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பிரவேசித்து பணிந்துகொண்டு, தன் வீட்டிற்கு வந்து போஜனம் பண்ணி மீண்டும் ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்கிறார். தேவனின் மன்னிப்பைப் பெற்றார் தாவீது. அதனால்தான் தேவன் என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன் என தாவீதைப் பற்றிக் கூறுகிறார் (அப்.13:22).
பாவிகளாகிய நம்மை மீட்பதற்காய் கல்வாரிச் சிலுவையிலே தம் உயிரையே பணயமாக வைத்த தேவன் நம்மை மன்னித்து தம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார். இப்படி ஒரு தேவன் நமக்கு இருக்கும்போது நாம் ஏன் பாவத்துடன் சேர்ந்திருக்கவேண்டும்? அல்லது ஏன் பாவத்தை மறைக்கவேண்டும்? இன்றே நம்மை அவரிடத்தில் ஒப்படைப்போம்.
ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, எங்களிலுள்ள குறைகளை, பாவத்தை அடிக்கடி நீர் உணர்த்திக் காட்டும்போது அதை உடனே விட்டு விலக ஆவியானவர் எங்களுக்கு உதவி செய்ய ஜெபிக்கிறோம். ஆமென்.”