ஆசீர்வாதங்களால் வரும் சோதனை

தியானம்: 2026 மே 8 வெள்ளி | வேத வாசிப்பு: யாத்திராகமம் 16:4-5

YouTube video

அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன் (யாத். 16:4).

நாம் சந்திக்கின்ற அநேக சோதனைகள், துன்பங்கள், வியாதிகள் மற்றும் சில துயரமான அனுபவங்கள் பல வடிவங்களில் வரலாம். ஆனால் எல்லா சோதனைகளும் அப்படி அல்ல. சில நேரங்களில் மகிழ்ச்சியான நேரங்கள்கூட துன்ப நேரத்தின் சோதனைகள்போலவே அமைந்துவிடுகின்றன.

சீனாய் வனாந்தரத்தை இஸ்ரவேல் மக்கள் சென்றடைந்தபோது, அவர் களுக்கு அங்கே உணவு கிடைக்காமல் போயிற்று. அநேக மக்களைப் போஷிப்பதற்கு இந்த வறண்ட வெப்பமான பாலைவனத்தில் ஒன்றுமே அகப்படவில்லை. ஆனால் இந்த சூழ்நிலையை, கர்த்தர், தமது மக்களை சோதிப்பதற்காகவும் தம்மேல் விசுவாசம் வைப்பதற்குக் கற்றுக்கொடுக்கவும் ஏற்றதாக பயன் படுத்திக்கொண்டார். கிருபையாய் தூதர்களின் அப்பத்தைத் தாராளமாக அவர்களுக்குக் கொடுத்தார். பனித்துளி போலிருந்த இதனை, மக்கள் “மன்னா” என்று அழைத்தனர். இந்த அற்புதப் பரிசு மற்ற ஆசீர்வாதங்களைவிட சிறந்ததாகும். ஆனாலும் தம்முடைய கட்டளைகளின்படி நடக்கிறார்களா இல்லையா என்று பார்ப்பதற்கு தேவன் தந்த சோதனையாகவும் அது அமைந்தது. அளவற்ற துன்பங்களை அனுபவிக்கும் நேரங்களைவிட, அபரி மிதமான ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் தேவனுக்குக் கீழ்ப்படிவது கடின மாகவே தோன்றும். உலக இன்பங்கள் நமது ஆவிக்குரிய செவிகளை இலகுவில் மந்தமாக்கிவிடும். அப்பொழுது, வழி இதுவே; இதிலே நடவுங்கள் என்று கூறும் கர்த்தருடைய சத்தத்தை (ஏசா.30:21) நம்மால் கேட்கமுடியாது. சோதனைகள் நமது வாழ்வில் இல்லாவிட்டால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மாயை உண்டாகி, சாத்தானின் சோதனைகளில் எளிதில் விழும் வாய்ப்புகள் உருவாகிவிடும். எனவேதான் சிலர், “பணத்தில் புரளும் காலத்தைவிட ஏழ்மையில் கர்த்தருக்குள் வாழ்வது எளிது” என்பர்.

நீதிமொழிகள் 30ம் அதிகாரத்தை எழுதிய ஆகூர் என்பவர், நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும், தரித்திரப்படுகிறதினால் திருடி என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்’ (வச.8-9) என்று ஜெபித்தார். நாம் இன்று ஆசீர்வாதமான காலத்தில் இருப்பதாக உணருகிறோமா? தேவனுக்கு நன்றி. அதேசமயம் அதனால் வரும் அபாயத்தையும் அறிந்து உணர்வுடையவர்களாயிருக்க எச்சரிக்கையாயிருப்பது அவசியம். ஒளி நிறைந்த காலத்திலும், இருள் சூழ்ந்த காலத்திலும், எக்காலத்திலும் தேவனுக்குக் கீழ்ப்படிதலே அவசியம். அனுதினமும் கர்த்தரை நம்பிக் கீழ்ப்படிந்திருப்போமாக.

ஜெபம்: கர்த்தாவே, வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் எந்த நிலையானாலும் உம்மையே எங்கள் நம் பிக்கையாகவும் தஞ்சமாகவும் கொண்டு உமக்குக் கீழ்ப்படிந்திருக்க உதவும். ஆமென்.