குறை சொல்லுதல்

தியானம்: 2026 மே 10 ஞாயிறு | வேத வாசிப்பு: யாத்திராகமம் 16:8-10

YouTube video

கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த …. உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான் (யாத். 16:8).

பலநேரங்களில் சில வார்த்தைகள் நமக்கு சந்தேகத்தை எழுப்புவதாக இருக்கும். “உங்களுக்குத் தரவேண்டிய பணத்தை நான் காசோலையாக அஞ்சலில் அனுப்பியுள்ளேன்” என்று நம்மிடம் கடன் வாங்கியவரும், “இதற்கு அதிக செலவாகாது” என்று இயந்திரகோளாறுகளை திருத்தம் செய்பவரும், “இது உங்களுக்கு வலியைத் தராது” என்று மருத்துவரும் நம்மிடம் கூறுவதைக் கேட்டிருப்போம். இவ் வார்த்தைகள் எந்தளவு நமக்கு நம்பிக்கையைத் தருவனவாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தவையே. இதேபோன்று, “நான் எதையும் குறையாக சொல்லவில்லை” என்றும், “நான் குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்” என்றும், மற்றவர் எதிர்பார்த்தது நம்மிடம் கிடைக்காது என்பதை ஒரு பெரிய கதைபோல பிறர் நம்மிடம் கூறுவதையும் பலவேளைகளில் கேட்டிருக்கிறோம்.

இதுபோன்ற ஏராளமான குறைகூறும் சொற்களை, இஸ்ரவேல் மக்கள் தங்கள் பயணத்தில் கூறுவதை மோசேயும் ஆரோனும் குறைந்தது மூன்று தடவைகள் கேட்டார்கள். (மாரா -யாத்.15:24; சீன் வனாந்திரம் -யாத்.16:2, ரெவிதீமில் -யாத்.17:3) இப்படி இஸ்ரவேல் மக்கள் குறைகூறியது மட்டுமின்றி, “என்மீது கல்லெறியவும் பார்க்கிறார்களே” (யாத்.17:4) என்று மோசே கர்த்தரிடம் முறையிடுகிறார். குறைசொல்லுவதற்கு மனிதர்கள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. நாம் பிறரைக் குறைசொல்லும்போது, தேவனிடமும் குற்றம் கண்டுபிடிக்க முயலுகிறோம் என்பதே மெய்யான அர்த்தம். ஏனெனில் நம்முடைய வாழ்க்கையில் நேரிடும் சம்பவங்களெல்லாம் அவரது அனுமதியுடனேயே வருகின்றன என்பதை மறக்கலாகாது. சர்வவல்லமையுள்ள அவரை நாம் குறைசொல்லும்போது, “இவைகள் எனக்கு நேரிட நீர் அனுமதித்திருக்கக் கூடாது, நீர் தவறு செய்துவிட்டீர்” என்றே கூறுவதாக அமையும். தேவன் தவறு செய்பவரல்லர்; அன்புமிகுந்த அவர், தேவையில்லாத தலைவலியை அனுமதிப்பவரல்ல.

இனிமேல், சக மனிதரையோ அல்லது சூழ்நிலைகளையோ குறைசொல்ல நாம் எத்தனிக்கும்போது, நம்மை மிகவும் நேசிக்கும் சர்வவல்ல தேவன் யாவையும் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்வோம். நாங்கள் இப்பொழுது அனுபவிக்கும் துன்பங்கள், பாடுகள் யாவும் நம்மை சிறந்த ஒருவராக மாற்ற தேவன் உபயோகிக்கும், “பண்படுத்தும் கருவிகள்” என்பதை மறக்கக்கூடாது. இனிமேல் குறைகூறாமல், நம்மை அன்புடன் பராமரிக்கிற தேவனுடைய கண்காணிப்புக்குள்ளேயே அனைத்தும் அடங்கியிருக்கிறது என்பதில் நாம் மகிழ்ந்திருப்போமாக.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, சகலத்தையும் நன்மைக்கேதுவாகவே நடத்துகிற உமது கரத்தில் அடங்கியிருந்து, முறுமுறுப்பில்லாமல் சோதனைகளைச் சகிக்க கிருபை தாரும். ஆமென்.