ஒதுங்கிச் செல்லுங்கள்

தியானம்: 2026 மே 12 செவ்வாய் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 17:1-3

YouTube video

அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரிட்சை பார்க்கிறீர்கள் என்றான் (யாத்.17:2).

புதிதாக வீதிகளை அமைக்கும்போதும், சாலைகளைச் செப்பனிடும்போதும் “ஆட்கள் வேலையில், ஒதுங்கிச் செல்லுங்கள்” என்ற அறிவிப்புப் பலகை வைத்திருப்பதை கவனித்திருப்பீர்கள். இது இரு செய்திகளை நமக்குத் தெரிவிக்கிறது. அதாவது, வாகனத்தின் வேகத்தைக் குறைத்துச் செல்வதும், மற்றும் நமது கவனக் குறைவால் வேலை செய்யும் ஆட்களுக்கு ஆபத்து நேரிடாமல் இருக்கவேண்டும் என்பதுமாகும். சாலைப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் வேலை செய்கிறார்கள். எனவே நாம்தான் அவர்களுக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும்.

இதுபோன்றதான ஒரு அறிவிப்பை மோசே, ஆரோன் ஆகியோரின் கூடாரங்களுக்கு வெளியிலும் அன்று வைத்திருந்திருக்க வேண்டும். அடிக்கடி இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தலைவர்களை எதிர்த்து குரல்கொடுப்பதும், போராடுவதுமாக இருந்தனர். இறுதியில் மோசேயை கல்லால் அடித்து சாகடிக்கவும் துணிந்துவிட்டனர் (வசனம் 4). அந்த சோக சம்பவத்தைக் கர்த்தர் சரியான வேளையில் தடுத்து நிறுத்தினார். இஸ்ரவேலர்கள் மோசேக்கு தொந்தரவு செய்யாதிருக்க வேண்டியதாயிருந்தது. இன்றும் அநேக சபைகளில் இவ்வித அறிவிப்புப் பலகையை வைப்பது நலமாயிருக்கும். 22.8 சதவீத போதகர்கள் தாம் அருட்பணி செய்து வந்த சபையிலிருந்து நீக்கப் படவோ அல்லது, அம்மக்களின் தொல்லையால் அந்தச் சபையை விட்டு விலக வேண்டிய நிலைக்கோ தள்ளப்பட்டார்கள் என்றும், 62 சதவீத போதகர்கள், தாம் அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டனர் என்றும், இதேபோல் தங்களுக்கு முன்னிருந்த போதகர்களுக்கும் அவ்வாறே செய்தனர் என்றும் இரண்டு கிறிஸ்தவ பத்திரிகைகள் நடத்திய ஒரு ஆய்வின்போது கூறினார்கள். இது பரிதாபத்திற்குரிய விஷயம்.

தேவனுடைய சபையை நடத்திச் செல்ல அழைக்கப்பட்ட போதகர்களுக்கு நாம் தொந்தரவு கொடுக்காமல் ஒதுங்கிச் செல்லவேண்டும். அடுத்தமுறை நமது சபைப்போதகரை குறைசொல்ல நேரிட்டால் கவனமாயிருப்போமாக. நாம் அவர்களை மட்டுமல்ல; தேவனையும் எதிர்க்கிறோம் என்பதே உண்மை. அவர்களை எதிர்க்கும் முன்பதாக அதற்கான நமது நோக்கத்தை சற்று சிந்தித்துப் பார்ப்போம். அது தனிப்பட்ட நபருக்கு எதிரானதாக இல்லாமல், சரியான வேத ஆதாரத்துடன் கூடியதா என்று ஆராய்ந்து பார்ப்பது அவசியம். நாம் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிச் செல்லுவோமாக. கர்த்தர் தெரிந்துகொண்ட ஊழியரிடம் குறைசொல்வதைத் தவிர்த்து, குறைவுகளை நிவிர்த்தியாக்க மனதார அவர்களுக்குத் துணை நிற்பது மிகவும் நல்லது.

ஜெபம்: “அன்பின் தேவனே, அருட்பணி ஊழியங்களுக்கு தேவன்தாமே முன்னறிந்து தெரிந்துகொண்ட சபைப்போதகர்களுக்காக ஜெபிக்கிறவர்களாகவும், அவர்களுக்கு உபத்திரவத்தை ஏற்படுத்தாதவர்களாக நாங்கள் காணப்பட எங்களுக்கு உதவும். ஆமென்.”