நேர்மையற்ற வாழ்வு

தியானம்: 2026 மே 14 வியாழன் | வேத வாசிப்பு: சங்கீதம் 11:1-7

YouTube video

அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள் (யாத்.17:8).

கிறிஸ் என்பவர் நான்கு குழந்தைகளுக்குத் தகப்பன். கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அவர், சிறுவயதிலேயே கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். நல்ல ஆரோக்கியமான சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருக்கு திடீரென்று புற்றுநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு பெரியஅதிர்ச்சியாக அவரது குடும்பத்தினருக்கு அமைந்தது. இவ்வாறு நிகழக்காரணமே இல்லை. அப்போது, பக்தியான இந்த வாழ்க்கை நேர்மையற்றதாய் அவருக்குத் தோன்றியது. இஸ்ரவேலரும் தாங்கள் நல்லமுறையில் நடத்தப்படாததைக் கண்டனர். எந்தவித காரணமும் இல்லாமல், நாடோடி இனத்தவரான அமலேக்கியர் அவர்களை எதிர்த்தனர். தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக இஸ்ரவேல் மக்கள் அடிக்கடி அமலேக்கியரின் வெறுப்புக்கும் தொந்தரவுகளுக்கும் ஆளானார்கள். வாழ்க்கை கசந்தது. இது தேவைதானா?
மூன்று ஆண்டுகள் சிகிச்சைக்குப் பின்னர் கிறிஸ் புற்றுநோயிலிருந்து பூரண குணமடைந்தார். அப்பொழுது அவரடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆம்,நம் தேவன் சூழ்நிலைகளை மாற்றுகின்ற சர்வவல்லவர் (ரோமர் 8:28). இஸ்ரவேல் ஜனங்களும் அமலேக்கியரை முறியடித்தனர். வாழ்க்கை நேர்மையற்றதாகத் தோன்றினாலும் தேவன் நீதிபரர். அவர் சீக்கிரத்திலேயே நியாயம் கிடைக்க கிரியை செய்வார். நாம் நினைக்கும் நேரத்திலோ, நாம் எதிர்பார்க்கும் விதத்திலோ அவரது பதில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் அநியாயம் செய்யமாட்டார். துன்மார்க்கர் மேல் கண்ணிகளை வரு ஷிக்கப் பண்ணுவார்; அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு (சங்.11:6) என்று தாவீது கூறுகிறார்.
பல சந்தர்ப்பங்களிலும் நமது நேர்மையான வாழ்வு வீண் என்று நினைக்கிறோமா? எதிர்பார்த்திராத மக்களால் அநியாயமாய் நடத்தப்படுவதாக நாம் உணருகிறோமா? நம்முடன் பணிபுரிபவர்கள் தேவையற்ற தொல்லை கொடுத்து வருகின்றனரா? நமது முழு தாலந்தையும் வெளிப்படுத்த முடியாத உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறோமா? பலமுறை பழுதுபார்த்தும் வாகனம் சரியாக இயங்கவில்லையா? பரவாயில்லை. மனதைத் தளரவிடவேண்டாம். எல்லாவித சூழ்நிலையிலும் கர்த்தரையே நம்புவதற்குக் கற்றுக்கொள்வோம். குறிப்பிட்ட பிரச்சனைக்கு தேவன் பொறுமையுடன் தீர்வு காணட்டும். நமது வாழ்க்கை நியாயமற்றதாய் நமக்குத் தோன்றலாம். ஆனால் தேவன் நீதிபரர். வாழ்க்கை நேர்மையற்றதுபோல தெரியலாம்; ஆனால் தேவன் மாத்திரமே நீதிபரர் என்பதை மனதில் நிறுத்திக்கொள்வோமாக.
ஜெபம்: “நீதியின்; தேவனே, எங்களுக்கு அநியாயங்கள் நடப்பதுபோல் நாங்கள் உணரும்போது மகா நீதிபரராகிய உம்மை மட்டுமே நோக்கிப்பார்க்கிறோம். நீர் எங்கள் துணையாயிருந்து எங்களை நடத்தும். ஆமென்.