உதவும் கரங்கள்

தியானம்: 2026 மே 16 சனி | வேத வாசிப்பு: யாத்திராகமம் 17:10-12

YouTube video

மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது … ஆரோனும் ஊரும் … அவன் கைகளைத் தாங்கினார்கள் (யாத். 17:12).

முக்கியமான காரியங்கள் தாமதமாகவே பலசமயங்களில் நடந்தேறுகின்றன. நோவா வெப்ஸ்டர் அவர்கள் தன்னுடைய அகராதியை வெளியிட 36 வருடங்கள் கடுமையாக உழைத்தார். ரோமப் பேரரசின் வீழ்ச்சியும் அழிவும் (Decline and Fall of Roman Empire) என்ற புத்தகத்தை எழுத கிப்பான் என்பவர் 26 வருடங்கள் எடுத்துக்கொண்டார். மில்டன் தன்னுடைய இழந்த பரதீசு (Paradise Lost) என்ற புத்தகத்தை எழுதுவதற்காக ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவார். குடியரசு (Republic) என்ற புத்தகத்தை எழுதிய தத்துவஞானியான பிளேட்டோ அதன் முதல் வாக்கியத்தை ஒன்பது தடவைகள் எழுதிப்பார்த்த பின்னரே திருப்தியடைந்தாராம்.

தேவைகள் நிறைந்த இக்கட்டான சூழ்நிலைகளில், நமக்கு உதவ ஓடோடிவரும் நண்பர்களைப் பெற்றிருப்பது அற்புதமாகும். மோசேக்கும் இவ்விதமான ஆசீர்வாதம் அமைந்தது. அமலேக்கியருடன் எழுந்த போர் மிக முக்கியமானது. தங்களுடைய பயணத்தின் ஆரம்பத்திலேயே இஸ்ரவேலர் தோற்றுவிட்டால், அவர்கள் மிகவும் சோர்வுற்று மீண்டும் எகிப்துக்கே திரும்பிவிடுவார்கள். எனவே இப்போரில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஆனால் அது எளிதானதல்ல. மோசே கையை ஏறெடுத்து ஜெபித்த போது இஸ்ரவேலர் போரின் வெற்றிமுகத்தில் இருந்தார்கள். அவருடைய கை தளர்ந்து கீழிறங்கும்போது தோல்வியடைவது போலிருந்தது. அந்த நேரத்தில் ஆரோனும் ஊரும் மோசேக்கு உதவ முன்வந்தனர். இவர்களின் உதவியால் அமலேக்கியர்கள் முறியடிக்கப்படும்வரை மோசே தன் கைகளை உயர்த்தி வைத்திருக்க முடிந்தது.

வெற்றிக்கு அடிப்படைத் தேவை ஜெபம். ஆனால் அதனுடன் கடின உழைப்பும் தேவை. ஒருவேளை நாம் சரீரத்தில் உற்சாகமுடையவர்களாகவும் ஆத்துமாவில் சோர்வுடையவர்களாகவும் இருந்தால் நாம் தோற்றுப்போன மனநிலையில் இருப்போம். அந்தவேளையில் ஆரோன், ஊர் போன்ற விசுவாச நண்பர்கள் இருந்தால், நமது முயற்சியில் தமது உதவியையும் ஆலோசனை யையும் அவர்களே தருவார்கள். ஜெபிக்கும் நண்பர்கள் நமக்கு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் உண்டாக்குவார்கள். ஆரோனும் ஊரும்போல தேவையான இடத்தில் உதவிக்கரம் நீட்ட ஆயத்தமாய் இருப்போம். ஒருவேளை இன்று, நமது ஜெபம் தேவைப்படும் ஒருவர் இருக்கலாம். அவரது வெற்றிக்கு நமது ஒத்தாசை தேவைப்படலாம். தேவன் நம்மை அவரண்டைக்கு வழிநடத்துவார். ஆனால் செல்ல நாம் ஆயத்தமா? வெற்றியைத் தனியாகப் போராடி பெற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு கூட்டு முயற்சி.

ஜெபம்: “அன்பின் தேவனே, தேவையுள்ள இடத்தில் தேவையோடு உள்ள நபர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையில் நாங்கள் வளர உமதருள் தாரும். ஆமென்.”