எழுதி வைத்தல்!
தியானம்: 2026 மே 17 ஞாயிறு | வேத வாசிப்பு: யாத்திராகமம் 17:13-14

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும் பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி (யாத். 17:14).
மறதி என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒருநிலை. இது மனித இயல்பு. “பரத்தில் இருந்து நாம் அநேக ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறோம். மக்கள் தொகையில் பெருகியிருக்கிறோம். செல்வம், வல்லமை, ஆகியவற்றில் மற்ற நாடுகளைவிட அதிகமாக வளர்ந்திருக்கிறோம். ஆனால் நம்மைப் பலுகிப் பெருகி வளத்தைப் பெருக்கி சமாதானத்தோடு காத்துக்கொண்ட தேவ கிருபையின் கரத்தை மறந்துவிட்டோம்” என்று அமெரிக்க மக்களிடம் காணப்பட்ட மறதியை ஆபிரகாம் லிங்கன் அவர்கள் வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார். இன்று நம்மைப்பற்றி என்ன?
மக்கள் மறந்துவிடும் இயல்புடையவர்கள் என்பதை அறிந்த தேவன், அமலேக்கியருக்கு எதிராக நடந்த யுத்தத்தைப்பற்றி எழுதிவைக்க மோசேக்கு அறிவுறுத்தினார். மேலும், இஸ்ரவேலின் எதிர்கால தலைவனான யோசுவா அதை நினைவில் வைத்திருக்கும்பொருட்டு அவருக்கும் வாசித்துக்காட்டச் சொன்னார். இந்த யுத்தத்தின் வெற்றி, வேதபுத்தகத்தில் எழுதப்பட்டிருந்ததாலேயே, அன்றிலிருந்து இன்றுவரை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அது தைரியத்தைக் கொடுத்துவருகிறது. தேவன் நம்மை நடத்துகிறார் என்ற உறுதியையும் அது தருகிறது.
தேவன் நமக்குச் செய்த நன்மைகளை எழுதி வைத்திருக்கிறோமா? நமது வாழ்வில் கர்த்தர் தந்த வெற்றிகளைக் குறித்து வைத்திருக்கிறோமா? ஒரு சிலர் ஆன்மீகக்குறிப்பேடு வைத்திருந்து நாள்தோறும் அதில் எழுதிவருவார்கள். வேறு சிலர் முக்கிய நிகழ்ச்சிகளை மட்டும் எழுதிவருவார்கள். தேவன் தந்த ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் நாம் நினைவில் வைப்பதைவிட, மறந்து விடாதிருக்க எழுதி வைப்பது மிகச் சிறந்தது. நாம் சோர்வின் பள்ளத்தாக்கில் இருந்துகொண்டு, “தேவன் என்னை நேசிக்கிறாரா?” என்று எண்ணும் வேளையில், நமது ஆன்மீகக் குறிப்பேட்டை எடுத்து வாசித்துப் பார்ப்போமாக. அவை நமக்கு நிச்சயம் உற்சாகத்தைத் தரும். அதுமாத்திரமல்ல, தேவன் செய்த அற்பு தங்களையும் நன்மைகளையும் நமது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கூறுவோமாக. கடந்தகாலத்தில் இரக்கமாக நம்மை நடத்திய தேவன், எதிர்காலத்தில் தங்கள் வாழ்விலும் கிரியை செய்வார் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அது உண்டாக்கும். சிறந்த நினைவுகளைவிட எளிமையான நினைவுகளை எழுதிவைக்கும் குறிப்புகளே அதிகம் சிறந்தது. இன்றே ஒரு குறிப்பேட்டை ஆயத்தம் செய்து, இன்று கர்த்தர் என்னுடன் இடைப்பட்ட, அல்லது உணர்த்திய, அல்லது செய்த காரியத்தை எழுத ஆரம்பிப்பேனா? கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி நான் துதிப்பதும் அல்லாமல், பின் சந்ததிகளும் கர்த்தரண்டை வரும்படி அவைகளை நான் எழுதி வைப்பேனா?
ஜெபம்: “தகப்பனே, எங்கள் வாழ்வில் நீர் செய்த நன்மைகளை, அற்புதங்களை பிள்ளைகளின் பிள்ளைகளும் அறியத்தக்கதாக ஞாபகக்குறியாக எழுத எங்களுக்குதவும். ஆமென்”.