யேகோவா நிசி
தியானம்: 2026 மே 18 திங்கள் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 17:14-16

மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு, … அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான் (யாத்.17:16).
இங்கிலாந்து தேசத்தின் அரசியான இரண்டாம் எலிசபெத் மகாராணி அவர்களுக்கு பக்கிங்ஹாம் அரண்மனை, வின்ட்சர் மாளிகை, ஹோலிரூட் அரண்மனை என மூன்று அரண்மனைகள் இருந்தன. எனவே இராணியார் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பது கடினம். எனவே, அவர் எந்த அரண்மனையில் இருக்கிறாரோ அந்த மாளிகையின் உச்சியில் அவரது கொடி ஏற்றப்பட்டிருக்கும். மஞ்சளும் நீலமும் கலந்த கொடியானது கொடிமரத்தில் பறந்துகொண்டிருந்தால் அரசியார் அங்கு இருப்பது நிச்சயம்.
மோசேக்கும் ஒரு கொடி இருந்தது. அமலேக்கியரை முறியடித்தபின் அவர் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு “யேகோவாநிசி” என்று பெயரிட்டார். அதாவது, “தேவன் என் ஜெயக்கொடி” என்பதே அதன் பொருளாகும். தேவன் தம்முடைய ஜனங்களுடன் வாசம் பண்ணுகிறார் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று மோசே விரும்பினார். அமலேக்கியர் இஸ்ரவேலருடன் யுத்தம் பண்ணினாலும் தேவன் இஸ்ரவேல் மக்களைக் கைவிடவில்லை. தலைமுறை தலைமுறையாக தேவன் தங்கள் நடுவில் இருக்கிறார் என்பதை இஸ்ரவேலர் அதன்மூலம் அறிந்துகொள்ளுவார்கள்.
கிறிஸ்தவர்களாகிய நாமும் நமது வாழ்வில் ஆண்டவரின் கொடியை ஏந்துபவர்களாய் வாழவேண்டும். நம்முடைய சூழ்நிலைகள் எவ்வளவுதான் கடினமாகத் தோன்றினாலும் தேவன் நம் மத்தியில் வாசம் பண்ணுகிறார். அவர் நம்மைவிட்டு விலகமாட்டார். “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார்” என்று அப்போஸ்தலரான யோவான் அறிவிக்கிறார் (யோவா.1:14). “இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்று இயேசு கிறிஸ்து கூறினார் (மத்.28:20). இராஜா இருக்கும் இடத்தில் அவரது கொடி பறக்கவேண்டுமே.
இராஜா நம்மில் வாசம்பண்ணுவதை மற்றவர்கள் அறிந்திருக்கிறார்களா? விசுவாசம், நம்பிக்கை அன்பு என்ற நிறங்களில் அமைந்த அவரது கொடி நமது வாழ்க்கை என்ற மாளிகையின்மேல் பறப்பதை உறுதிசெய்வோமாக. அவரது கொடி நம்மேல் பறப்பது நமக்குக் கிடைத்த பாக்கியமே. அதைக் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். விண்ணரசர் நமது மாளிகையில் வாசம் பண்ணும்போது, அவரது கொடி ஏற்றப்பட்டிருக்கிறதா என்பதை நாமேதான் நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும். நாம்தானே அவருடைய மாளிகை!
ஜெபம்: “கர்த்தாவே, எங்கள் வாழ்க்கையில் கிறிஸ்து வீற்றிருக்கிறார் என்பதை அறியப்படுத்தும் உமது நேசக்கொடி எங்கள்மேல் பறந்திடட்டும். எங்களோடு வாசம் பண்ணுகிற உமது அன்பை புறஇன மக்களும் அறிந்துகொள்ள எங்களை முற்றிலுமாய் அர்ப்பணிக்கிறோம். ஆமென்.”