எல்ஷடாய்

தியானம்: 2026 மே 21 வியாழன் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 18:8-12

YouTube video

உன்னை…. பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் (யாத்;. 18:10).

“சோவியத் நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் 1965ம் வருடத்துக்குள் தமது நாட்டிலுள்ள கடைசி கிறிஸ்தவரையும் அழித்துவிடுவேன்” என்று அந்நாட்டு பிரதமமந்திரியாய் இருந்த நிகிதா குருச்ஷேவ் சவால்விட்டார். அவர் இறந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்பொழுது முன்பைவிட அங்கு அதிகமான கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். கார்ல் மார்க்ஸ் என்பவர், “தேவன்மீது நம்பிக்கை வைப்பது நசுக்கப்பட்டவர்களின் அடையாளம், மக்களின் போதைப்பொருள்” என்றார். அவரும் மரித்துவிட்டார். ஆனால் அவர் எதிர்த்த நம்பிக்கையானது உலகம் முழுவதும் பரவிவருகின்றது. ஆம், தலைவர்கள் பலர் எழும்புகின்றனர், தேவனுக்கு விரோதமாகக் குரல் கொடுக்கின்றனர், ஆனாலும் அவர்கள் அனைவரும் மரித்து மறக்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் அதேவேளையில், தமக்கு எதிராக எழும்பும் செயல்களைப் பொருட்படுத்தாது, இவ்வுலகிற்கான தம்முடைய காரியங்களை தேவன் செயல்படுத்திக் கொண்டேயிருக்கிறார். அந்த எதிர்ப்புகள் அவரை இம்மியளவேனும் பாதிப்பதில்லை.

எகிப்திய கடவுள்களைக் குறித்தும், பார்வோனைக் குறித்தும் இதுபோன்றே எத்திரோ எண்ணியிருந்தார். அவர்கள் தங்கள் முஷ்டியை தேவனுக்கு விரோதமாக உயர்த்தினார்கள். ஆனால் தேவன் அவர்களை விடப் பெரியவர். ஒரு ரயிலை நிறுத்த முயன்ற எறும்புபோல சர்வவல்லமையுள்ள தேவனுக்கு எதிராக எழும்பிய அவர்கள் அழிந்து போனார்கள். கர்த்தர், தாமே எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை மீண்டுமாக நிரூபித்தார். வரலாற்றுச் சுவடிகளைத் திருப்பிப் பார்க்கும்போது, நம் தேவன் அனைத்து மக்களுக்கும், அனைத்து இயக்கங்களுக்கும், அனைத்து சூழ்நிலைகளுக்கும் மேலானவராக தம்மைக் காண்பித்திருக்கிறார். எனவேதான் சங்கீதக்காரனும், “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” (சங்.121:1,2) என்று பாராட்டியதில் வியப்பில்லை. “இதோ நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” என்று தேவனும் சவால் விடுக்கிறார்(எரே.32:27).

தேவ பக்தியில்லாத மனிதருக்கோ, அமைப்புகளுக்கோ, பயமுறுத்தும் சூழ்நிலைகளுக்கோ நாம் பயப்படுகிறோமா? நமக்கு உதவ முன்வரும் கன்மலையை நினைத்துக் கொள்ளுவோம். வானமும் வையமும் படைத்த வரான அவருக்கு நமது துன்பங்கள் ஒரு பொருட்டு அல்ல. மோசேயை விடுவித்த அவர் நம்மையும் விடுவிப்பார். கலங்கவேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய தேவன் சர்வ வல்லவர். இவ்வுலக இன்னல்கள் தேவனை ஒருபோதும் துன்பப்படுத்தாது.

ஜெபம்: அன்பின் பிதாவே, எங்களுக்கு வரும் இன்னல் மற்றும் துன்பங்களினால் வீண் கலக்கம் அடையாதவாறு கர்த்தருக்குமுன் அவைகள் அனைத்தும் ஒன்றுமில்லையென உதறித்தள்ள கிருபை தாரும். ஆமென்.