காத்திருத்தல் வீணல்ல

தியானம்: 2026 ஜுன் 2 செவ்வாய் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 30:22-26

YouTube video

அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும், இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றாள் (ஆதி.30:23,24).

நீண்டகாலம் காத்திருப்பது என்பது மனிதனுக்கு மிகுந்த இளைப்பை உண்டாக்கும் விஷயம். ஆனால் காத்திருந்தது வரும்போது அது கொடுக்கின்ற மகிழ்ச்சி சொல்லி முடியாதது. இதைத்தான் நீதிமொழிகள் இப்படிச் சொல்கிறது: “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவ விருட்சம்போல் இருக்கும்” (நீதி.13:12). இன்று நாமும் எதற்காவது விரும்பிக் காத்திருந்து களைத்துப்போய் இருக்கிறோமா? கர்த்தர் ஜெபத்தைக் கேட்கவில்லையே என்று தவிக்கிறோமா?

யாக்கோபு மனதார விரும்பியது ராகேலைத்தான்; ஆனால் லாபானின் சூழ்ச்சியால் அவளது கூச்சப்பார்வையுடைய அக்கா லேயாள் அவனுக்கு மனைவியானாள். என்றாலும் யாக்கோபு ராகேலுக்காக மேலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்து அவளை மனைவியாக்கிக் கொண்டான். அற்பமாய் எண்ணப்பட்ட லேயாளுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. இதைப் பொறுக்க முடியாத ராகேல் தன் அக்காவில் பொறாமை கொண்டு, தனது வேலைக்காரியை யாக்கோபுக்குக் கொடுக்க, லேயாளும் தனது வேலைக்காரியைக் கொடுக்க, அவர்களும் யாக்கோபுக்கு பிள்ளைகளைப் பெற்றார்கள். அதன் பின்பு லேயாள் இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் பெற்றுவிட்டாள். இத்தனையும் நடந்துமுடிந்த பின்னரே, கர்த்தர் ராகேலை நினைந்தருளினார். ராகேலுக்குத் தேவன் அருளிய குமாரன்தான் யோசேப்பு. இங்கே இரு சகோதரிகளினது அவசரங்களும் குடும்பத்தில் பின்னால் பல பிரச்சனைகளுக்கு வித்திட்டிருந்தாலும், யாக்கோபின் அன்பு மனைவி ராகேல் ஒரு மகனைப் பெற்றபோது, தன் தாயின் நிந்தையை நீக்கியவன் என்றும், இன்னும் கர்த்தர் ஒரு மகனைத் தருவார் என்றும் ராகேல் மகிழ்ந்து அவனுக்கு இட்ட பெயர்தான் யோசேப்பு.

ஆம், “தேவன் நிந்தையைப் போக்கிவிட்டார்” என்பதன் அடையாளமாகப் பிறந்தவர் தான் யோசேப்பு. மாத்திரமல்ல, யோசேப்பு என்றால் “பெருக்கம்” என்று அர்த்தமாம். பிறக்கும்போது உறுதியான ஆசீர்வாதத்தைச் சுமந்து கொண்டு பிறந்த யோசேப்பு, தன் பெயருக்கேற்றபடி பிறப்பிலே தன் தாயின் நிந்தையைப் போக்கியது மாத்திரமல்லாமல், தன் வாழ்விலும் தன் இனத்தாரின் குறைகளை நீக்கிய ஒருவராகவே காணப்படுகிறார். யோசேப்பு பிறப்பதற்கு கர்த்தர் ஒரு வேளையை வைத்திருந்தார். அவருடைய வேளைகள் ஒருபோதும் தவறாகாது. ஆகவே, நமது ஜெபங்களுக்கும் கர்த்தர் ஒரு ஏற்ற காலத்தை வைத்திருப்பார்; அப்போது பெரிய ஆசீர்வாதத்துடன் அது நிச்சயம் கிடைக்கும். ஆனால் நாம் காத்திருக்கவேண்டுமே!

ஜெபம்: தகப்பனே, அநேகநேரங்களிலே உம்முடைய வேளைக்கு நாங்கள் காத்திருக்காமல் ஆசீர்வாதங்களை இழந்திருக்கிறோம். எங்களை மன்னியும். காத்திருந்து உமது கரத்திலிருந்து மேன்மையான ஆசீர்வாதங்களைப் பெற எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.