பாசமும் பகையும்
தியானம்: 2026 ஜுன் 3 புதன் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 37:1-5

இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான் (ஆதி.37:3).
பெற்றோர் பிள்ளைகள் உறவில் மலருவதுதான் குடும்பம். அந்த மலரில் ஒரு இதழ் காயப்பட்டாலே குடும்ப அழகே கெட்டுவிடும். முன்னர்; ஒரு குடும்பத்தில் ஐந்து அல்லது ஆறு பிள்ளைகள் இருப்பார்கள். இன்று எண்ணிக்கையும் குறைந்து, குடும்ப ஐக்கியமும் சற்று தூரமாகிவிட்டதே! என்றாலும், இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால், யாரோ ஒரு பிள்ளையிடம் அதிக பாசம் காட்டுகின்ற பெற்றோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு ஒரு வகையில் பிள்ளைகளும் காரணமாகி விடுகிறார்கள். இதனால் பல குடும்பங்களில் பாசமும் பகையும் சேர்ந்தே பயணிக்கிறது. இதன் விளைவுகளும் அதற்கேற்ப பாதகமாகவே இருக்கும்.
யாக்கோபுக்கு, லேயாள் மூலமாகவும் இரண்டு அடிமைகள் மூலமாகவும் பத்துமகன்களும் ஒரு மகளும் பிறந்திருந்தாலும், அவர் அன்பாக நேசித்த ராகேலுக்கு இன்னமும் பிள்ளை பிறக்காதது அவருக்கு நிச்சயம் ஒரு குறையாகவே இருந்திருக்கும். பின்னர் யாக்கோபின் முதிர்வயதிலே ராகேல் தன் முதல் பிள்ளையைப் பெற்றெடுத்தாள். ராகேல் ஒரு மகனைப் பெற்றெடுத்தது ஒரு நிறைவைக் கொடுத்ததோ என்னவோ, யாக்கோபு தன் தேசத்துக்குப் போக ஆயத்தமானார் என்று பார்க்கிறோம். மாத்திரமல்ல, தனது முதிர்வயதிலே யோசேப்பு பிறந்ததினால், யாக்கோபு, தனது குமாரர் எல்லாரிலும் யோசேப்பை அதிகமாக நேசித்தார். அந்நாட்களிலே எல்லோரும் மேலங்கி அணிவதுண்டு. ஆனால் யாக்கோபு தன் செல்ல மகனுக்கு மற்றவர்களிலும் வேறுபட்ட பல வர்ணங்கள் நிறைந்த அங்கியைச் செய்வித்துக் கொடுத்தார். சகோதரர் மனதில் யோசேப்பின்மீது வெறுப்பு ஆரம்பிக்க இது ஒன்று போதுமே. போதாதற்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல, யோசேப்பும் தான் கண்ட சொப்பனங்களை சகோதரருக்கு அறிவித்தார். இதனால் சகோதரருக்குள் உண்டான சாதாரண பொறாமை, கோபமாக மாறி, இப்போது தம் சகோதரனைப் பகைக்குமளவுக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டது. என்னதான் சகோதரரின் பகைமையை சந்திக்க நேரிட்டிருந்தாலும், யோசேப்புக்கு அப்பாவின் பாசம் நிறையவே கிடைத்தது. பாசமும் பகைமையும் கலந்த இந்த சூழ்நிலைதான் யோசேப்பு தன் வாழ்வில் சந்தித்த முதல் அனுபவமாகும். அப்பா காட்டிய பாசத்தின் விளைவு, தான் கண்ட சொப்பனத்தை வெளிப்படையாகக் கூறியதால் நேரிட்ட பகைமை உணர்வு, இதை பகுத்துப்பார்க்க தெரியாத முதிர்ச்சியற்ற பருவம், தன் வாழ்வில் பதினேழு ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்தக் காலம்தான், யோசேப்புக்கு அறியாமலேயே, அவர் முகம்கொடுத்த முதல் அனுபவமாக இருந்தது. அதுவே அவரை உருவாக்கும் காலமாயிருந்தது. நமது ஆரம்பகால வாழ்வின் அனுபவங்களை சற்றுத் திரும்பிப்பார்த்து சிந்தித்துப் பார்ப்போம். நிச்சயம் எதுவுமே வீணுக்கல்ல என்பது புரியும்.
ஜெபம்: அன்பின் தகப்பனே, எங்களது குடும்ப உறவுகளில் பகைமை சேர்ந்து வளராதபடி சிறியோர் முதல் பெரியவர் வரை தேவஅன்பினால் நிரப்பப்பட உதவி செய்யும். ஆமென்.