காரணங்கள் இரண்டு
தியானம்: 2026 ஜுன் 6 சனி | வேத வாசிப்பு: ஆதியாகமம் 37:17-24

ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான் (ஆதியாகமம் 37:19).
நம்மைக் குறித்து பிறருடைய மனநிலை எப்படியிருக்கிறது என்பதை அறியாமலேயே நாம் அலட்சியமாய் இருந்துவிடுகிறோம். ஒருநாள் அது வெடித்துச் சிதறி காரணங்கள் வெளியே தெரியவரும்போது மெய்யாகவே அது தாங்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை நீங்கள் சந்தித்ததுண்டா?
அண்ணன்மாரின் மனநிலையைக் குறித்து யோசேப்பு கவனம் எடுத்ததாக தெரியவில்லை. அவர்களைத் தேடிப்போய் விசாரித்து வரும்படி அப்பா சொன்னபோது எந்தவித தயக்கமுமின்றி யோசேப்பு எழுந்துபோனார். தருணம் பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு பழிதீர்க்க இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது. யோசேப்பு வீட்டுக்கு திரும்பி ஓடவும் முடியாத தொலைதூரத்திலே அவர்கள் இருந்ததும் வாய்ப்பாக அமைந்தது. தூரத்திலே யோசேப்பு வருவதைக் கண்டவுடனேயே கொலைத் திட்டம் தீட்டுகிறார்கள். அவர்கள் கூறிய முதற் காரியம், “சொப்பனக்காரன் வருகிறான்” என்பதுதான். சொப்பனத்தின்படி, தாங்கள் இவனை வணங்குவார்கள் என்று இவன் எதிர்பார்க்கிறானா என்ற இவர்களுடைய ஆத்திரம் இப்போது வெளி வந்தது. யோசேப்பு தான் கண்ட கனவைச் சொல்லி சகோதரரை வெறுப்பேற்றினாரா அல்லது கண்டதைச் சொன்னாரா? அடுத்ததாக, யோசேப்பு தன் சகோதரரிடத்தில் வந்தபோது அவர் உடுத்தியிருந்த பலவர்ண அங்கியில் அவர்கள் பார்வை விழுந்தது. அதைக் கழற்றி விட்டுத்தான் அவரைக் குழியிலே போட்டார்கள். ஆக, ஏற்கனவே சகோதரரின் பொறாமையைத் தூண்டிவிட்ட அந்த அங்கியை அணிந்துதான் யோசேப்பு வந்திருந்தார் என்பது தெரிகிறது. தகப்பனின் தனித்துவமான நேசத்தின் அடையாளமான அந்த அங்கிதான் பொறாமைக்கு ஆரம்பமாக இருந்தது. அதை இப்போது சகோதரர்கள் கைப்பற்றிவிட்டார்கள். ஆக, தகப்பன் கொடுத்த அங்கியும், யோசேப்பு கண்டு கூறிய கனவுகளுமே யோசேப்புக்கு எதிராக எழுந்தன. இத்தனைக்கும் யோசேப்பு கதறி அழுதார் என்று எழுதப்படாவிட்டாலும், அன்போடு விசாரிக்க வந்தவருக்கு நடந்தது நிச்சயம் அவருக்கு வலியை ஏற்படுத்தியிருக்கும்.
நமக்குள் கோபமோ பொறாமையோ இல்லாதிருந்தாலும் நம்மைச் சுற்றிலும் அப்படியான ஒரு வலை பின்னப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்பா கொடுத்த பலவர்ண அங்கியும், யோசேப்பு தான் கண்ட கனவைச் சொன்னதுமே அவருக்குக் குழிபறித்துவிட்டது. நாமே சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்காதபடி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மேலும், இப்படியாகத் தாக்கப்படும் போது, யோசேப்பின் வாழ்விலிருந்து, கர்த்தர் யாவையும் பார்த்துக் கொள்வார் என்பதைக் கற்றுக்கொண்ட நாம் பொறுமையைக் காத்துக்கொள்வது சிறந்தது.
ஜெபம்: இரக்கமுள்ள கர்த்தாவே, அன்பானவர்களால் வெறுக்கப்படும்போதும், தள்ளப்படும்போதும் நீடியபொறுமையையும் தாங்கிக்கொள்ளும் கிருபையையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.