இரண்டு பேர்கள்!

தியானம்: 2026 ஜுன் 7 ஞாயிறு | வேத வாசிப்பு: ஆதியாகமம் 37:18-27

YouTube video

அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டு விடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான் (ஆதி.37:22).

நம்பிக்கை இழந்து, நாம் நேசிக்கிறவர்களால் உதாசீனம் செய்யப்பட்டு கலங்கி நிற்கிறோமா? இரண்டு கண்கள் எந்நேரமும் நம்மை நோக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை எந்தக் கேடான சூழ்நிலையிலும் மறந்திடக் கூடாது. “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகள்… மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (1கொரி.2:9) என்று எழுதிய பவுல், இன்று நமக்கு தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார். ஆம், பாவிகளாகிய நமக்கான மன்னிப்பு இரட்சிப்பு நித்தியவாழ்வு என்று தேவன் நமக்காக ஆயத்தம்பண்ணினவைகளை நாம் இன்று அனுபவிக்கிறோமே! ஆக, பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்க ஒரு இரட்சகரைத் தந்தவருக்கு, இந்த அநித்தியமான உலக வாழ்வின் இன்னல் களிலிருந்து நம்மை இரட்சிக்க முடியாதா? தேவன் நம்மில் கொண்டிருக்கிற அநாதி சித்தம் நிறைவேறுமளவும் நம்மை எதுவும் அசைக்க முடியாது என்கிற உறுதியான விசுவாசம் நமக்கு அவசியம்.

யோசேப்பைக் கொன்றுபோட சகோதரர்கள் திட்டம் தீட்டியபோது, ரூபன் இடைப்படுகிறான். தன் தம்பியை அப்பாவிடம் சேர்க்க மனதுள்ளவனாய், குழிக்குள் போடுவோம், அங்கே அவன் சாகட்டும் என்று சொல்லி மற்றவர்களின் மனதை மாற்ற, அவர்களும் அப்படியே செய்தார்கள். இவ்விதமாய் ரூபன் யோசேப்பைத் தப்புவித்தான். பின்னர் ரூபன் இல்லாத சமயத்தில், வீணாக இரத்தப்பழியைச் சுமக்க வேண்டாம் என்று சொல்லி, யோசேப்பை விற்றுப்போட ஆலோசனை சொல்கிறான் யூதா. அப்படியே எகிப்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த மீதியானியரிடம் யோசேப்பு விற்கப்படுகிறான். ரூபன், யூதா இந்த இருவரும் யோசேப்பின் வாழ்வில் ஆயத்தம் பண்ணப்பட்ட நன்மைகளாக இருந்தார்கள். இவர்கள் ஒவ்வொரு விதத்தில் செயற்பட்டாலும், யோசேப்பின் வாழ்வில் தேவன் வைத்திருந்த அநாதி திட்டத்தில் தாங்கள் செயற்படுகிறோம் என அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஆனால் இந்த இருவரும் யோசேப்பிற்காக கர்த்தர் ஆயத்தம் பண்ணிய நன்மையான பாத்திரங்களாகும்.

“கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; தீவினைகளைச் செய்கிறமனுஷன் மேலும் எரிச்சலாகாதே” (சங்.37:7). நமக்கான கர்த்தருடைய திட்டம் நிறைவேறுமளவும் நம்மை யாரும் எதுவும் செய்யமுடியாது. கடந்த காலத்தில் நமது இக்கட்டுகளில் எதிர்பாராமல் நமக்கு உதவி செய்தவர்களை நினைத்துப்பார்ப்போம். அவர்கள் தாமாக வந்து உதவியதுபோலத் தெரிந்தாலும், அவர்கள் கர்த்தருடைய கரத்தில் இருந்தார்கள் என்பதை நாம் நம்பவேண்டும்.

ஜெபம்: எனக்காக யாவும் செய்துமுடிக்கும் தேவனே, இக்கட்டுகள் ஆபத்துகள் எங்களை சூழந்துகொண்ட வேளைகளில் எங்களுக்கு உதவி செய்யும் கரங்களை தந்தமைக்காக உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.