தனித்து விடப்பட்டாயா!

தியானம்: 2026 ஜுன் 9 செவ்வாய் | வேத வாசிப்பு: ஆதி. 37:28; யோவான் 16:31,32

YouTube video

ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார் (யோவான் 16:32).

தனித்துவிடப்பட்ட, தனிமையாக்கப்பட்ட அல்லது தனிமை உணர்வுக்குள் தள்ளப்பட்ட எல்லாமே ஒன்றுபோலத் தெரிந்தாலும் இவற்றிடையே நுணுக்கமான வேறுபாடுகள் உண்டு. தனித்துவிடப்படுதல், எல்லாரும் பிரிந்துபோக செய்வதறியாது தனியே நிற்பது; தனிமையாக்கப்படுதல் என்பது எல்லாரும் சூழ இருந்தாலும் ஒருவரும் இல்லாதது போன்ற வெறுமை நிலை, இது மிகக் கொடுமையானது; தனிமை உணர்வு என்பது தனித்திருந்தாலும் நான் தனியே இல்லை என்று தைரியம் கொள்வதற்குப் பதிலாக, நான் தனித்துவிட்டேனே என்று நமக்குள் ஏற்படுகின்ற எதிர்மறையானதொரு உணர்வு. எதுவாயினும் இந்தத் தனிமை என்ற உணர்வுக்கு நாம் இடமளித்தால் அதுவே நமது வாழ்வைக் கொன்றுபோடும்.

யோசேப்பு குழிக்குள் தள்ளப்பட்டபோது அவர் தனித்துவிடப்பட்டார். குழியிலிருந்து தூக்கி எடுக்கப்பட்டபோது அண்ணன்மார் மனம் மாறிவிட்டார்களோ என்றுகூட அவர் நினைத்திருக்கலாம். ஆனால், சகோதரர் யாவரும் இருந்தும் யாரும் இல்லாத சூழ்நிலையில் அவர் புறவினத்தாரிடம் விற்கப்பட்டார். அந்நியரால் விலைக்கு வாங்கப்பட்டு அடிமையாக அவர் கொண்டுபோகப்பட்டபோது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மை யோசேப்பின் இடத்தில் நிறுத்தி சற்றுத் தியானித்துப் பார்ப்போமாக. எதையும் சிந்திக்கத் தெரியாத இளைஞனான யோசேப்பின் இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.

இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள்கூட தனித்துவிடப்பட்டவர்கள்தான்; ஆனால் யாரும் சோர்ந்துபோனது கிடையாது. “எல்லோரும் என்னைக் கைவிட்டார்கள்” என்று எழுதிய பவுல் சோர்ந்துபோனாரா? “நாங்கள் எப்பக்கத்தில் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை” என்று சூளுரைத்தார் அல்லவா! ஆண்டவர் இயேசு தாமே, சீஷரிடம், “நீங்கள் என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுதே வந்திருக்கிறது” என்றார். அப்படியே வந்தது. இயேசு தனித்துவிடப்பட்டபோது தவித்து நின்றாரா? பத்மூ தீவில் தனித்து நின்ற யோவானுக்குத்தான் கர்த்தர் அந்தப் பெரிய தரிசனத்தைக் கொடுத்தார். “வழிதனில் கூர்முள்ளும், கொடுவெயிலும் வாட்டி உன்னை வதைத்தாலும், தனித்துவிடப்பட்ட வேதனையால் தள்ளாடி நீ வீழ்ந்தாலும், மன்னவன் இயேசு உன் முன்னே இப்பாதையில் நடந்திட்டாரே, மனமே அதை மறந்திடாதே. உன் துயர் கண்டு உன்னுடன் நடக்கும் இயேசுவைக் கண்திறந்து பார்” இது ஒருவர் தனது தனிமை அனுபவத்தில் அனுபவித்து எழுதியது. ஆக, தனிமையைக் கண்டு அஞ்சவேண்டாம். தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் (சங்.23:4).

ஜெபம்: அன்பின் இயேசுவே, எங்கள் தனிமையின் வேளைகளிலும் மனக்கலக்கமான நேரங்களிலும் உமது திவ்யபிரசன்னத்தை தந்து எங்களைத் தேற்றுகிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.