இருபது வெள்ளிக்காசு

தியானம்: 2026 ஜுன் 10 புதன் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 37:27-30 மத்.26:14-16

YouTube video

அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள் (ஆதியாகமம் 37:28).

ஒரு திருமண பேச்சுவார்த்தையிலே, ஒரு பத்து லட்சம் பணமாகக் கொடுக்க வேண்டும் என்று மாப்பிள்ளையின் தாய் கேட்க, மணமகளே பதிலளித்தாள்: “அப்போ உங்கள் மகனுடைய விலை பத்து லட்சம் மாத்திரமா? இவ்வளவு மலிவானவர் எனக்கு வேண்டாம்” என்றாள். இக் காலத்துப் பெண்கள் மிகவும் உஷாரானவர்கள் அல்லவா!

யோசேப்புக்கு அவருடைய சகோதரர் விதித்த விலை வெறும் இருபது வெள்ளிக்காசுகள்; இவர்களுக்கு பணத்தைப் பார்க்கிலும் யோசேப்பு சாக வேண்டும். ஒரு அடிமையாக யோசேப்பு நீடித்து வாழமாட்டான் என்றே அவர்கள் நம்பினார்கள். யோசேப்பு ஏறத்தாழ முப்பது நாட்கள் அந்த வனாந்தரத்தில் சங்கிலியில் கட்டப்பட்டவனாக, சுடுமணலிலே வெறுங்காலுடன் கொடூரமாக கொண்டுபோகப்பட்டு, எகிப்திலே அடிமையாகவே விற்கப்பட்டார். சகோதரரைப் பொறுத்தவரையில் அவன் தொலைந்தான், இனி அவனை உயிரோடே காண வாய்ப்பில்லை என்று நம்பினார்கள். ஆனால் தேவனுடைய திட்டங்களை மனிதனால் கட்டுப்படுத்த முடியுமா?

யூதாஸ், இயேசுவுக்கு விலை பேசுகிறான்; முப்பது வெள்ளிக்காசு என்று பிரதான ஆசாரியர் சொன்னபோது இயேசுவைக் காட்டிக்கொடுக்க அவன் சம்மதித்தான். இதற்கு யூதாசுக்கு என்னதான் காரணம் இருந்தது? ஏற்கனவே பணத்தாசை பிடித்த யூதாஸை பிசாசு தூண்டிவிட்டான் (யோவா.13:2) அவ்வளவு தான். யூதாஸ் ஆண்டவரைக் காட்டிக்கொடுத்து பணம் சம்பாதிக்க முயன்றான். மாறாக, இயேசு செத்துப் போகவேண்டும் என்ற சிந்தனை இவனுக்குள் இருந்திருந்தால், பின்னர் உணர்வடைந்து அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் போயிருக்கமாட்டான் அல்லவா!

பணத்திற்கு ஆட்களைக் கொலை செய்கிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனால், ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் விலை பேசுவது எப்படி? ஒவ்வொரு மனிதனும் தேவசாயலில் படைக்கப்பட்டவர்கள். யோசேப்பின் சகோதரர் அவன் தொலைந்தான் என்று எண்ணினர், தேவனோ அவனுக்காக பெரியதொரு திட்டத்தை வைத்திருந்தார். இயேசுவின் மரணத்தில் தேவன் ஒரு மகா பெரிய திட்டத்தையே நிறைவேற்றினார். பிரியமானவர்களே, மனிதர் நமக்கு எதிராகவோ, நாம் செத்தாலும் பரவாயில்லை என்றோ நமக்காக விலை பேசலாம். அவர்களுக்கு நாம் துச்சமாகக் காணப்படலாம். ஆனால் நாம் கர்த்தருடைய பார்வையில் விலைமதிப்பற்றவர்கள் அல்லவா! தேவனுடைய பிள்ளை களில் தேவன் கொண்டிருக்கும் திட்டங்களை எந்த மனிதனாலும் அழித்துப் போடமுடியாது. ஆகவே, நம்மை வைத்து யார் எதைச் செய்தாலும் நாம் கலங்கவேண்டிய அவசியம் இல்லை.

ஜெபம்: தேவனே, விலையேறப்பெற்ற உம்இரத்தத்தால் நாங்கள் மீட்கப்பட்டுள்ளோம். உமது கரத்திலிருந்து ஒருவராலும் எங்களை பறிக்கஇயலாது. உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.