கைவிடாத கர்த்தர்
தியானம்: 2026 ஜுன் 12 வெள்ளி | வேத வாசிப்பு: ஆதியாகமம் 37:36; 39:1-2

கர்த்தர் யோசேப்போடே இருந்தார் (ஆதியாகமம் 39:2).
நன்மையோ, அல்லது நமக்குத் தீங்குபோல தெரிகின்ற நிகழ்வுகளோ, எதுவானாலும் கர்த்தர் நம்முடனே இருக்கிறார் என்ற அசைக்கமுடியாத விசுவாசம் நமக்கு உண்டா? இருந்தால் எதிர்மறையான காரியங்கள் சம்பவிக்கும்போது நாம் ஏன் தவித்துக் கலங்குகிறோம்?
யோசேப்பு குழிக்குள் இருந்தபோது எகிப்துக்குப் போகின்ற வியாபாரிகள் அவ்வழியாக வந்தது என்ன? விலைகொடுத்து வாங்கிய அடிமையை மீதியானியர் தங்கள் தேவைக்கு வைத்திராமல், விற்றுப்போட்டது, அதிலும் எகிப்தில் விற்றுப்போட்டது என்ன! அடுத்ததாக, எகிப்து தேசம் வளமான தேசம்; அங்கே அன்று வசித்தவர்கள் மிகுந்த ஐசுவரியவான்களாக இருந்தார்கள், அல்லது மிகுந்த கீழ் நிலையில் இருந்தார்கள். எகிப்தியனான போத்திபார் என்பவன் பார்வோனின் அரசாட்சியில் மிக முக்கியமானவனும், எல்லா காவலாளர்களுக்கும் அதிகாரியுமாயிருந்தான். நிச்சயம் அவன் மாளிகை வீட்டில் உயர்நிலையான வாழ்வு வாழுகின்ற ஐசுவரியவானாகவே வாழ்ந்திருப்பான். இவன் இந்த வியாபாரிகளைச் சந்தித்தது என்ன? அவர்களிடம் யோசேப்பை விலை கொடுத்து வாங்கியதும் என்ன?
கர்த்தர் தமது பிள்ளைகளுக்காக வைத்திருக்கின்றவற்றை எந்த மானிடக் கண்களோ தேவ தூதர்களோ கண்டதில்லை என்ற வாக்கியம் பொய்யாகுமா? நடப்பது என்னவென்று உணரமுடியாத நிலையில் யோசேப்பு இருந்திருந்தாலும், தேவன் தமது சித்தத்தை நேர்த்தியாகவே நிறைவேற்றிவந்தார். இதற்கு வேதவாக்கியம் நமக்கு தருகின்ற உறுதி ஒன்றே ஒன்றுதான்: “கர்த்தர் யோசேப் போடே இருந்தார்.” ஆகவே, நிச்சயம் யோசேப்பும் கர்த்தருடன் கூடவே இருந்திருக்கிறார் என்பது, அவர் முறுமுறுத்ததாகவோ, முறையிட்டதாகவோ எந்த வாக்கியமும் எழுதப்படாததிலிருந்து நமக்கு உறுதியாகிறது. கர்த்தர் தமது பிள்ளைகள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மேன்மையான நோக்கம் வைத்திருக்கிறார். அதை யாராலும் மாற்றமுடியாது. மாற்றக்கூடிய ஒரே நபர் நாமேதான். முதலில் நம் ஆண்டவர், கல்வாரியில் தம்மைப் பலியாக்கி நம்மை மீட்டுக் கொண்டவர், எல்லா நிலையிலும் நம்முடன் கூடவே இருக்கிறார் என்பதை நாம் நம்பி, அவரைச் சார்ந்திருக்கவேண்டும். இங்கேதான் நாம் அடிக்கடி சறுக்கி விடுகிறோம். நன்மைகள் சம்பவிக்கும்போது கர்த்தர் கூடவே இருக்கிறார் என்று சொல்லுகின்ற நாம், எதிர்மறையான காரியங்கள் சம்பவிக்கும்போது சந்தேகப்படுவதும் ஏன்? சவாலிடும் யோசேப்பின் வாழ்வின் சம்பவங்களைத் தியானிக்கின்ற நமக்கு, அவை நமது வாழ்வோடு இணைந்து நம்மைப் பக்குவப்படுத்த வேண்டும். அதற்கு நாம் இடமளித்து எல்லா நிலையிலும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போமா!
ஜெபம்: எங்களை கைவிடாத நேசரே, எப்படிப்பட்டதொரு கடினமான சூழ்நிலையாயினும் நீர் விலகாததேவனாய் எங்களோடிருப்பதற்காக உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.