நம்மை காண்கிறவர்கள்
தியானம்: 2026 ஜுன் 13 சனி | வேத வாசிப்பு: ஆதியாகமம் 39:1-6

கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும்…. அவன் எஜமான் கண்டு…. (ஆதியாகமம் 39:3).
மனுஷர் நம்மை எப்படிக் காண்கிறார்கள் என்பதல்ல, தேவன் நம்மை எப்படிக் காண்கிறார் என்பதே முக்கியம். அதாவது, நமது இருதயம் தேவனுக்கு முன்பாக சுத்தமாக இருப்பது அவசியம். ஆனால் இதற்கு ஒரு மறுபக்கம் உண்டு. அதாவது, மனுஷர் நம்மைக் காண்கிற காட்சிதான் நமது உள்ளான வாழ்வின் கண்ணாடியாயிருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது. நாம் வேஷம் போடலாம்; ஆனால் அது அதிக நாட்கள் நிலைக்காது. நமது செயல் பேச்சு நடை உடை எல்லாமே நமக்குள் யார் இருக்கிறார், நாம் யாருடன் உறவில் இருக்கிறோம் என்பதை துல்லியமாக சொல்லாமலே சொல்லிவிடும்.
தேசம், மனுஷர், பாஷை, அடிமையான அவலம், என்று எல்லாம் புதிதாயிருந்த சூழ்நிலையில் ஒரு இளைஞனின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? ஒரு அடிமை வாழ்வு என்பது மிக மிகக் கடினமானது. அவன் தன் கடமையில் தவறினால், கொடூரமான தண்டனை உண்டு. இப்படிப்பட்ட ஒரு அடிமைக்கு அவன் எஜமான் கண்களில் தயை கிடைத்தது எப்படி? ஆம், யோசேப்புவின் காரிய சித்தியே எஜமானைக் கவர்ந்திழுத்தது; யோசேப்பு செய்ததெல்லாம் வாய்த்தது. இதனால் யோசேப்பு போத்திபாரின் விசாரணைக்காரனாக உயர்த்தப்பட்டார். அது முதற்கொண்டு யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியனுடைய வீட்டையும், வெளியில் அவன் காரியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார் என்பதையும் போத்திபார் கண்டான். ஒரு அடிமையால் இது எப்படி ஆகும்? “கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு” ஆம், கர்த்தர் யோசேப்புடன் இருக்கிறார் என்பதை போத்திபார் கண்டான்.
இன்று நம்மைக் காண்கிறவர்கள் எதனைக் காண்கிறார்கள்? அன்று அபிமெலேக்கு ராஜா ஆபிரகாமிடம், “நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடன் இருக்கிறார்” என்று சாட்சி சொன்னான். கோராரின் ராஜாவும் மற்றவர்களும் ஈசாக்கிடம், “நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்” என்றார்கள். இப்படி ஒரு அறிக்கையை நம்மைக் காண்கிறவர்கள் நம்மைக் குறித்து இன்று கூறக்கூடுமா? கர்த்தர் நம்முடன் இருக்கிறார் என்பதை நமது வாழ்வுமுறை சாட்சி பகரக்கூடியதாக இருக்கிறதா? கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, அதன்மேல் தியானமாயிருக்கிறவன் செய்வதெல்லாம் வாய்க்கும் என்பது வேத வாக்கு (சங்.1:3). இப்படியிருக்க, இன்று நம்மைக் காண்கிறவர்கள் கர்த்தர் நம்முடன் இருக்கிறார் என்பதைக் கண்டு அறிக்கை பண்ணக்கூடியதாக நமது வாழ்வு இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்ப்போமாக.
ஜெபம்: அன்பின் பிதாவே, எங்களை காண்கிறவர்கள் மெய்யாகவே கர்த்தர் இவர்களோடு இருக்கிறார் என்று சொல்லும் சாட்சியின் வாழ்வை வாழ உமதருள் தாரும். ஆமென்.