தேவனுக்கு விரோதமாக…!

தியானம்: 2026 ஜுன் 15 திங்கள் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 39:7-9

YouTube video

தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான் (ஆதி. 39:9).

பாவம், அதில் பெரிது சிறிது, ஆபத்தானது ஆபத்தற்றது என்று எந்தவித வேறுபாடும் இல்லை. மேலும் மனுஷருக்கு விரோதமானது, தேவனுக்கு விரோதமானது என்றும் பாவத்தில் வேறுபாடு இல்லை. யாரும் காணவில்லை என்று நாம் ஒளிப்பிடங்களில் எதைச் செய்தாலும், ஏன் மனதில் நினைத்தாலும்கூட, தேவனுடைய கண்களுக்கு எதுவும் மறைவானது அல்ல. தேவனுடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதன் செய்கின்ற ஒவ்வொரு பாவமும் தேவனுக்கு விரோதமானது. மாத்திரமல்ல, அவன் செய்கின்ற ஒவ்வொன்றுக்கும், நினைக்கின்றவற்றுக்கும் மனிதனுக்கல்ல, தேவனுக்கே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்பதுதான் சத்தியம்.

யோசேப்பு இளைஞன் என்றோ, தான் ஒருவரின் மனைவி என்றோ, தனது செயல்கள் தன் கணவனையும் பாதிக்கும் என்றோ நினையாமல், யோசேப்பின் சௌந்தரியத்திலும் அழகிலும் இச்சையான பார்வையைச் செலுத்தினாள் போத்திபாரின் மனைவி. தன்னைக் கட்டுப்படுத்த முடியாத அவள் தினமும் தவறான உறவுக்காக தன் பக்கம் யோசேப்பை இழுத்துக்கொண்டே இருந்தாள். இதற்கு, “நான் உன்னைப் புண்படுத்துகிறேனா” என்றோ, “உனக்கு இணங்கினால் நான் என் எஜமானுக்கு விரோதமாக பாவம் செய்வேன்” என்றோ, “நான் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வேன்” என்றோ யோசேப்பு எந்தவித பதிலும் கூறவில்லை. அதிகமான அழுத்தத்தின் மத்தியில் இப்படிப்பட்ட பதில்கள் எழுவது இயல்பானது. ஆனால் யோசேப்பின் பதில் தெளிவாக இருந்தது. “இந்த வீட்டில் எல்லாப் பொறுப்பையும் என் ஆண்டவன் என்னிடத்தில் தந்திருக்கிறார். ஆனால் நீ அவர் மனைவி. ஆகையால் உன்னைத் தவிர வேறொன்றும் அவர் எனக்கு விலக்கிவைக்கவில்லை. இந்தப் பெரிய பொல்லாப்புக்கு நான் உடன்பட்டால் (அது தனது எஜமானுக்கு விரோதமான செயல் என்று கூறாமல்) அது தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்ததாகும், அப்படிச் செய்வது எப்படி?” என்கிறான்.

இன்று பாலியல் ரீதியான பாவகாரியங்கள் மிக எளிதானதாகிவிட்டது. கர்த்தர் அதை அருவருக்கிறார். பாலியல் உறவு, விவாகம் ஆகியவை கர்த்தரால் வரையறுக்கப்பட்டுள்ளது. அதுவே ஒழுக்கம். ஆகையால், பாலியல் பாவமானது சம்மதிக்கின்ற இருவர் சம்மந்தப்பட்டது மாத்திரமல்லாமல், அது தேவனுக்குக் கீழ்ப்படியாத விரோத செயலாகவும் ஆகின்றது. பழைய ஏற்பாட்டிலே இஸ்ரவேலர் அந்நிய தெய்வங்களை நாடி பாவம் செய்த போதெல்லாம், அவர்கள், “விபச்சாரிகளே” என்று அழைக்கப்பட்டனர். இளைஞனான யோசேப்புக்குள் இருந்த வைராக்கியம், இன்று கல்வாரி அன்பினால் இயேசுவுக்குச் சொந்தமாக்கப்பட்ட நமக்குள் இருக்கவேண்டியது அதிக கட்டாயம் அல்லவா!

ஜெபம்: எங்கள் நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிற கர்த்தாவே, சிந்தையில் எழுகிற எந்தவொரு சிறியபாவமும் தேவனுக்கு விரோதமான பாவம் என அறிந்து ஜாக்கிரதையோடிருக்க எங்களுக்குதவும். ஆமென்.