இடுக்கத்திலும் தேவனுக்கே சாட்சி

தியானம்: 2026 ஜுன் 18 வியாழன் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 40:1-8

YouTube video

சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? (ஆதி. 40:8).

நன்மைகள் நிகழும்போது கர்த்தரை மகிமைப்படுத்தி, சாட்சி சொல்லுவதில் நமக்கு இருக்கிற உற்சாகம், துன்ப துயரத்தில் அகப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்திலும் இருக்கின்றதா? அதிலும் அநியாயமான சூழ்நிலைகளுக்குள் தள்ளப்பட்டால் நிச்சயமாகவே அது கடினமான காரியமே! ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனைத் துதிப்பதும் அவரை மகிமைப்படுத்துவதுமே உத்தம தேவ பிள்ளைக்கு அடையாளம். தேவன் தீமையைக் கொடுக்கிறவர் அல்ல; நமக்குத் தீமைபோல காணப்படுகிற விஷயங்களிலும்கூட அவர் தமது பிள்ளைகளுக்கு நன்மையே வைத்திருக்கிறவர். யோசேப்பு எல்லா நிலையிலும் கர்த்தரை மகிமைப்படுத்துவதையே காண்கிறோம்.

இப்போது, எகிப்திய ராஜாவுக்கு உணவு தயாரிக்கிற சுயம்பாகியும், அந்த உணவையும் பானத்தையும் முதலில் ருசி பார்த்து பின்னர் ராஜாவுக்கு அருகில் நின்று அதை அவருக்குப் பரிமாறுகின்ற பானபாத்திரக்காரனும் குற்றம் செய்து யோசேப்பு வைக்கப்பட்டிருந்த காவலர்களின் தலைவனின் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டது என்ன? சிறையதிகாரி இவர்களை விசாரிக்கும் பொறுப்பை யோசேப்பிடமே கொடுத்தது என்ன? அவர்கள் இருவரும் ஒரே இராத்திரியிலே வெவ்வேறு சொப்பனங்களைக் கண்டது என்ன? காலையிலே அவர்கள் முகங்கள் துக்கமாயிருந்ததை யோசேப்பு கவனித்தது என்ன? அவர்கள் தாங்கள் சொப்பனம் கண்டதாகவும், அதற்கு அர்த்தம் சொல்ல யாரும் இல்லை என்றும் யோசேப்பிடம் முறையிட்டது என்ன? இந்த இடத்தில் யோசேப்பு சோதிக்கப்படுகிறார். “நானும் சொப்பனம் கண்டிருக்கிறேன். என்னால் சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்ல முடியும்” என்று யோசேப்பு கூறியிருக்கலாம். ஆனால் யோசேப்பு, “சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியது” என்று சொல்லி, அவர்களுடைய கவனத்தை தேவனை நோக்கியே திருப்புகிறார். ஆம், தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தேவனுக்கே மகிமை செலுத்தி, யோசேப்பு சோதனையை ஜெயித்தார்.

இரண்டு விஷயங்களை இன்று நாம் தியானிப்போமாக. ஒன்று, தானே சிறைவாசம் அனுபவிக்கின்றபோதும், தன்னுடன் கூட இருக்கிறவர்களின் முகத்தில் தெரிந்த சோகத்தைக் கவனிக்கத் தவறாத யோசேப்பின் நற்குணம். இது இலகுவான விஷயம் அல்ல. அடுத்தது, சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுவது தேவனுக்குரியது என்று சொல்லி, தனக்குக் கிடைத்த சந்தப்பத்தைப் பயன்படுத்தி தேவனுக்கே சாட்சி கூறிய யோசேப்பின் உத்தம குணம். இன்றும் சிறையிலடைக்கப்பட்ட சில தேவபிள்ளைகள் சிறைக்குள் சாட்சியாக இருந்த சங்கதிகளைக் கேள்விப்படுகிறோம். தேவனுக்கே துதி. நமக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டால்?

ஜெபம்: தகப்பனே, எந்தச் சந்தர்ப்பத்திலும் கர்த்தரின் நாமத்தை மகிமைப்படுத்தி உயர்த்தும் உத்தமகுணத்தில் நாங்கள் வளர எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். ஆமென்.