எல்லாவிதத்திலும்…
தியானம்: 2026 ஜுன் 21 ஞாயிறு | வேத வாசிப்பு: எபிரெயர் 4:12-16

… எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் (எபி. 4:15).
தேவனுடைய பிள்ளைகளான நாம் எதிர்கொள்ளும் சோதனைகள் வேதனைகள் எதுவும் நம்மை வீழ்த்தவோ அழிப்பதற்கோ அல்ல. பதினேழு வயதிலே அன்பான தகப்பனையும் வீட்டையும் விட்டு வெளியே தள்ளப்பட்ட யோசேப்பின் வாழ்விலே நடந்த பல சங்கதிகளை கடந்த நாட்களில் நாம் தியானித்தோம். பார்வோனுக்கு முன்னே அவர் நிறுத்தப்பட்டபோது அவருக்கு வயது முப்பது. இந்தப் பதின்மூன்று ஆண்டுகளாக பல சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனால் அடிக்கடி வாசிக்கின்ற ஒரு வசனம், “கர்த்தர் யோசேப்போடே இருந்தார்” என்பதுதான். யோசேப்பு புடமிடப்பட்டு, கர்த்தருடைய திட்டத்துக்குத் தகுதிப்படுமளவும் இந்தக் காலப் பகுதியை அவர் கடக்கவேண்டியிருந்தது. ஆனால் கர்த்தர் யோசேப்புடன் கூடவே இருந்தார். இந்த தேவன்தான் நமது தேவனும்; நம்முடன் கூடவே இருக்கிறவர் அவர். அன்று யோசேப்பு இயேசுவை அறிந்திருக்கவில்லை. ஆனால், இன்று நம்மைப்போலவே மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராய், மனிதனாக வந்து (எபி.2:14), நம்மை போலவே வாழ்ந்து, வாழ்வில் நேரிடக்கூடிய சகல சோதனைகளாலும் சோதிக்கப்பட்டு (எபி.2:18), அதிலும் எல்லாவிதத்திலும் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டும் (எபி.4:15) பாவமில்லாதவராகவும், நமது பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடிய ஒருவராகவும் நமது ஆண்டவர் இயேசு நமக்கு இருக்கிறார். ஆகவே, எந்த நிலையிலும் நாம் அவரை நோக்கி நொருங்குண்ட இருதயத்துடன் கதறும்போது அவர் ஒருபோதும் நமது கூக்குரலைப் புறக்கணிக்கவேமாட்டார். நமது சோதனைகளில் நமக்கு உதவுவதற்கு ஓடி வருகிற அன்பின் ஆண்டவர் அவர். சோதனைகளில் அவர் நம்மை விலக்கிக் காப்பது ஒன்று, சோதனைகளின் மத்தியில் நம்முடன் கூடவே இருந்து நம்மைப் பெலப்படுத்துவது இன்னொன்று. நமக்கு எது அவசியம் என்பதை அவர் அறிந்திக்கிறார்.
“தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திர வத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” (2கொரி.1:4). பவுலின் இந்த வார்த்தைகள் யோசேப்பின் வாழ்வில் அன்று நிறைவேறியதல்லவா! சிறையிலடைக்கப்பட்ட யோசேப்பு, தன்னுடன் சிறையில் இருந்தவர்களுக்கு ஆறுதலாக இருந்தார்! இன்று எந்த சோதனையோ துன்ப துயரமோ, நம்மைப்போலவே சோதிக்கப்பட்டு ஜெயம் பெற்ற ஒருவர் ஓடிவந்து நம்மைத் தாங்கி நடத்த நமக்கு இருக்கிறார். அதேபோல சோதிக்கப்பட்டு புடமிடப்பட்ட நாமும் பிறருக்கு உதவுவதற்கு ஓடுவோமாக!
ஜெபம்: பரமதகப்பனே, எங்கள் சோதனைகாலங்களிளெல்லாம் நீர் எங்களை தாங்கி நடத்தினீர். இதுபோன்று தேவையோடு உள்ள மற்றவர்களுக்கும் நாங்கள் அந்த அன்பை காண்பிக்க எங்களுக்குக் கிருபை செய்யும். ஆமென்.