பயிற்சிக் களம்

தியானம்: 2026 ஜுன் 25 வியாழன் | வேத வாசிப்பு: யாக்கோபு 1:12-15

YouTube video

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான் (யாக்கோபு 1:12).

வாழ்க்கை அமைதலாக நகரும்போது திடீர் திருப்பங்களும் எதிர்பாராத சம்பவங்களும் குறுக்கிடுமானால் நாம் தடுமாறிப்போகிறோம். இது இயல்பான விஷயம். என்றாலும், கர்த்தரின் பிள்ளைகள் நாம் அவற்றுக்கு மேலாக எழும்பவேண்டும். வியாதியோ சோதனையோ பிரச்சனையோ எது வந்தாலும், அது கடந்துபோவதும் போகாததும் ஒருபுறமாக இருந்தாலும், நாம் அவற்றை எப்படிப் பார்க்கிறோம் என்பதே முக்கியம்.

யோசேப்பின் அமைதியான வாழ்விலே திருப்புமுனை தோன்றிய முதல் இடம் அவரது குடும்ப சூழல்தான் என்றால் மிகையாகாது. யோசேப்புக்காகத் தேவன் திட்டமிட்டிருந்த பெரிய நோக்கத்திற்காக அவரைப் பயிற்றுவிக்கும் ஆரம்பப் பயிற்சிக்களமே நெருக்கடிமிக்கதான அவரது குடும்ப சூழல்தான் என்பதை அன்று யோசேப்பு அறிந்திருக்க நியாயமில்லை. கடினமான குடும்ப சூழல், முதலாவதாக அன்பான அம்மா உயிருடனில்லை; அப்பா அன்பானவர் என்றாலும் சகோதரர்களின் உதாசீனம் கேலிப்பேச்சு வெறுப்பு தாங்க முடியாததாயிருந்தது. என்றாலும் யோசேப்பு ஆடுகளை மேய்த்துக்கொண்டும், அப்பாவின் சொல்லுக்கு இணங்கி அவர்களை விசாரிக்கத் தேடித்தேடியும் திரிந்தார், ஆனாலும் சகோதரரின் அன்பு யோசேப்புக்குக் கிடைக்கவில்லை. இந்த குடும்ப சூழலே அவரின் ஆரம்பப் பயிற்சிக்கூடமாக இருந்தது. இந்த சூழலிலும் யோசேப்பு வேறுபட்ட ஒருவராக, தன் சகோதரரின் துஷ்டத் தனத்துக்கு இணங்காதவராக, அப்பாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவராகவே வாழ்ந்தார் என்பதை இந்நாளில் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இந்தப் பரீட்சையில் அவர் தேறியவராக இருந்ததால்தான் அடுத்தபடியில், போத்திபாரின் மனைவியால் வந்த அருவருப்பான சோதனையை அவரால் முறியடிக்கக் கூடியதாக இருந்தது. யோசேப்பு எந்த சூழ்நிலையிலும் பிறருக்கு இணங்கி தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளாமல் படிப்படியாக முன்னேறிச் சென்றதை நாம் காண்கிறோம்.

பலர் தங்கள் குடும்ப சூழலை, தங்களுடன் வேலை செய்கிறவர்களைக் குறை கூறுவது உண்டு. வாலிபப் பிள்ளைகள், பிற பிள்ளைகளுடன் இணங்கி நடக்காவிட்டால் புறக்கணிக்கப்பட்டு விடுவதாகப் பயந்து இணங்கிவிடுவதுண்டு. சில விஷயங்களில் உலகத்துடன் அனுசரித்துப் போகவேண்டியது அவசியம் என்று பலர் வாதிடுவதுண்டு. எந்த சோதனையானாலும் அதைச் சகித்து, எல்லாமே என்னைப் பட்டைத்தீட்டும் பயற்சிக் களம் என்பதை உணர்ந்து, அவற்றை மேற்கொண்டு முன்செல்கிறவன், உத்தமன் என்று விளங்கின பின்பு, கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, உலகத்தை அனுசரித்து உம்மைத் துக்கப்படுத்தி வாழாமல் எங்கள் ஓட்டத்தை கிறிஸ்துவுக்குள் வெற்றியாய் ஓடிமுடிக்க உமது பெலன் தாரும். ஆமென்.”