நான்தான்

தியானம்: 2026 ஜுன் 28 ஞாயிறு | வேத வாசிப்பு: யோவான் 18:1-6

YouTube video

நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள் (யோவான் 18:6)

ஒரு தேவஊழியன் தான் தங்கியிருந்த கிராம மக்கள் மத்தியிலே நன்மதிப்புப் பெற்றிருந்தார். யாவரும் அவரை நேசித்தனர். எந்தவொரு சிறு விஷயமானாலும் அவரை நாடிப் போவார்கள். இதைக் கண்டு பொறாமை கொண்டனர் சிலர். ஊழியருக்கு விரோதமாக திட்டம் போட்டனர். அது ஊழியருக்குத் தெரியவந்தது. தங்களது திட்டம் தெரிந்து, அவர் ஓடி ஒளிந்துவிடுவார் என்று எண்ணினர். ஆனால் அந்த ஊழியரோ அவர்களையே தேடிப்போனார். அவர்கள் அதை எதிர்பார்த்திராதலால் ஆச்சரியத்தில் வாயடைத்துப்போயினர். ஊழியர் அவர்களுடன் அமர்ந்து, தான் கொண்டுவந்த அன்புப் பரிசுகளையெல்லாம் அவர்களுக்குப் பகிர்ந்துகொடுத்து, உங்கள் நாலுபேருக்கும் ஒரு கம்பெனியில் வேலைக்கு ஒழுங்கு செய்திருக்கிறேன். நாளைக்கே போய் வேலையில் சேர்ந்துகொள்ளுங்கள் என்றார். அவர்களோ வெட்கித் தலைகுனிந்தனர்.

இயேசுவை கைதுசெய்ய வந்தவர்களுக்கு அவர்கள் செய்யவந்த வேலையை அவர் இலகுவாக்கிக் கொடுத்தார். அது இருண்ட நேரமாய் இருந்ததால், தானேபோய் யாரைத் தேடுகிறீர்கள் என்றார். நீங்கள் தேடுகிற இயேசு நான்தான் என்றார். வல்லமையான காரியங்களைச் செய்த இயேசுவைப் பிடிப்பது என்பது இலகுவல்ல என்று எண்ணி, பந்தங்களோடும் ஆயுதங்களோடும் வந்த போர்வீரருக்கு இந்த வார்த்தைகளை ஜீரணிக்க முடியவில்லை. இனி தப்பித்துக்கொள்ள முடியாது என்பதனால் அல்ல; பிதா தமக்கு அருளிய பாத்திரத்தில் பருகவேண்டிய நேரம் வந்துவி;ட்டதை உணர்ந்த அவர் தம்மை மறைத்துக்கொள்ளவில்லை. தாமே தம்மை ஒப்புக்கொடுத்தார். வந்தவர்களோ இயேசுவின் அதிகாரத்திற்கும் வல்லமைக்கும் முன்னே நிற்கமுடியாமல் பின்னிட்டு வீழ்ந்தார்கள். அதற்காக இயேசுவை விட்டார்களா? பிடித்துக்கொண்டு போனார்கள். ஆனால் முடிவு உயிர்த்தெழுதல் அல்லவா?

தேவபிள்ளையே, நாம் தேவகரத்தில் இருக்கிறோம் என்ற உறுதி நமக்கு இருக்குமானால் நமக்கு எதிரே வருகிற எந்தத் தீங்குக்கும் நாம் பயப் படத்தேவையில்லை. மெய்யாகவே அவை நமக்குத் தீங்காகவே மாறலாம். ஆனாலும் தேவன் நிர்ணயிக்காத எதுவும் நம்மை அணுகவே முடியாது. ஆகவே, கர்ததருக்குள் வாழ்வது மெய்யானால் நாம் எதற்கும் பின்னடையத் தேவையில்லை. நம்மை எதிர்கொள்ளும் தீமையை, நமது நல்நடத்தை பின்னடையச் செய்யவேண்டும். அங்கே ஆண்டவர் மகிமைப்படுவார். நீ தீமையினாலே வெல்லப்படாமல் தீமையை நன்மையினாலே வெல்லு (ரோம.12:21).

ஜெபம்: “அன்பின் இயேசுவே நாங்கள் உமது கரத்தில் இருக்கிறோம். நீரே எங்களது சகாயர். உமது வழியில் என்றும் நிமிர்ந்து நிற்க எங்களுக்கு அருள் செய்யும். ஆமென்.