கர்த்தருடைய பார்வையுடன் இணைந்து
தியானம்: 2026 ஜூலை 15 புதன் | வேத வாசிப்பு: எண்ணாகமம் 13:17-33

நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்; (எண்ணாகமம் 13:30).
நமக்கு இரண்டு வகையான பார்வை உண்டு. ஒன்று நமது சரீரக் கண்களின் பார்வை. அதிலே கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்று உண்டு. இந்தத் தூரப்பார்வை எவ்வளவு தூரம் பார்த்தாலும் அதற்கு அப்பால் பார்க்கமுடியாது. அடுத்தது, நமது உள்ளான மனுஷனின் பார்வை. இது விசுவாசக் கண்களின் பார்வை. ஆனால் இந்தப் பார்வையில் குறைபாடு வரும்போது, அது நமது சரீரக் கண்களின் பார்வையையும் மட்டுப்படுத்தி விடுகிற அபாயம் உண்டு. நமது உள்ளான பார்வை, நமது சுயத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்வரைக்கும், தேவனுடைய அதி தூரப்பார்வையுடன் இணைந்திருக்க முடியாது. கர்த்தருடைய பார்வையுடன் நமது பார்வையும் இணையுமானால் அநேக அதிசயங்களை நம்மால் காணமுடியும்.
கானானைச் சுற்றிப் பார்க்கப்போன பன்னிருவரில் பத்துப்பேரும், அந்தத் தேசம் செழிப்பான தேசந்தான் என்று சொல்லி அதன் கனிகளையும் எடுத்து வந்து கொடுத்தார்கள். பின்னர், “ஆனாலும்” என்று ஆரம்பித்து அங்கே குடியிருக்கிறவர்களைக் குறித்து அவநம்பிக்கையான காரியங்களைச் சொல்லுகிறார்கள். ஆனால் மற்ற இருவரும், “நாம் போய் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்” என்கிறார்கள். பன்னிருவரும் ஒன்றாகத்தான் போனார்கள்; ஒரே விஷயத்தையே பார்த்தார்கள். ஆனால் அந்த இருவருடைய பார்வையும். சரீரக் கண்களின் பார்வைக்கு அப்பாலும் பார்த்தது. அதனால் அங்கே வசித்தவர்களின் தோற்றம் இவர்களை எதுவும் செய்யவில்லை. ஆனால் அந்தப் பத்துப்பேரும் சொன்ன அறிக்கை மிகவும் விநோதமானது. அங்கே இராட்சதப் பிறவிகளையும் பார்த்ததாகச் சொல்லிவிட்டு, “நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல இருந்தோம். அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்” என்கிறார்கள். இது வேடிக்கையாக இல்லையா! இவர்களுடைய பார்வைக்கு இவர்களே வெட்டுக்கிளிகள்போல மாத்திரமல்ல, அவர்களுடைய பார்வைக்கும் இவர்கள் வெட்டுக்கிளிகள்போல என்று இவர்களுக்கு எப்படித் தெரிந்தது? இதுதான் நாமும் செய்கின்ற தவறு. கர்த்தருடைய பார்வையில் கானானில் வாழ்ந்தவர்கள் ஒன்றுமே இல்லை. இஸ்ரவேலோ தங்களை இதுவரை நடத்தியவரை மறந்தார்கள். கண்கள் கண்ட குறுகிய தூரத்தைத்தான் பார்த்தார்கள்.
அந்த இருவரைத் தவிர, பத்துப்பேரின் விசுவாசக் கண்களும் குருடாய்ப் போயிருந்தது. நமக்கு முன்னே என்னதான் நம்மைப் பயமுறுத்தினாலும், நமது பார்வையை எப்போதும் தேவனுடைய கண்ணோட்டத்துடன் இணைத்துக்கொள்ள ஜாக்கிரதையாய் இருப்போம். அதாவது அவருடைய வார்த்தையே நமது விசுவாசக் கண்கள் காண்கின்ற தூரம். அந்தப் பார்வையை இழந்து விடாதிருப்போமாக.
ஜெபம்: அன்பின் தகப்பனே, எங்களது பார்வை தேவனுடைய கண்ணோட்டத்தோடு இணைந்திருக்கவும் தேவனுடைய அதிசயங்களை கண்டு துதிக்கவும் உமதருள் தாரும். ஆமென்.