பலவீனங்களிலும் மாறாத சந்தோஷம்
தியானம்: 2026 ஜூலை 17 வெள்ளி | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 12:6-10

ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன் (2கொரி. 12:9).
வாழ்வின் பெருந்துன்பங்களில் மாத்திரமல்ல, சகல நிலைகளிலும் கர்த்தருடைய கிருபை நமக்குப் போதுமானது, என்ற விசுவாசம் நமக்கிருக்குமானால் நாம் ஒருபோதும் அசைக்கப்பட மாட்டோம்; மாத்திரமல்ல, எல்லா நிலைகளிலும் நாம் சந்தோஷமாகவும் இருக்க முடியும்.
நேற்றைய நாளில் நாம் தியானித்தபடி, தனக்கு நேரிட்ட அந்த முள்ளின் வேதனை, தேவன் அனுமதிக்காமல் வந்திருக்கமுடியாது என்பதில் பவுல் உறுதியாயிருந்தார். ஆகையினால்தான் அவர் கர்த்தரையே சார்ந்து ஜெபித்தார். ஆனால் கர்த்தரோ, பவுலின் வேதனையை அகற்றவில்லை. மாறாக, வேறொரு காரியத்தைக் கர்த்தர் செய்தார். இதற்கு உகந்ததாக நான் கேட்டறிந்த ஒரு விளக்கத்தை உங்களுக்கும் தருகிறேன்: ஒரு மனிதன் ஒரு சிறு படகில் ஒரு நீண்ட ஆற்றை ஆனந்தமாகக் கடந்து சென்று கொண்டிருந்தான். எல்லாம் நலமாகவே இருந்தது. திடீரெனப் பார்த்தபோது, முன்னே ஒரு பெரிய குன்று இருப்பதைக் கண்டான். அது அவனுடைய வழியை அடைத்ததுபோலக் காணப்பட்டது. இப்போது அவன் என்ன செய்வான். முன்செல்லவும் முடியாது, பின்னே திரும்பவும் முடியாது. ஆகவே அவன், “ஆண்டவரே, இந்தக்குன்றை அகற்றிப்போடும்” என்று மிகுந்த விசுவாசத்துடன் ஜெபித்தான். விசுவாசத்துடன் கண்களைத் திறந்தான், ஆனால் குன்று அந்த இடத்திலேயே நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தது. அவன் மனம் சோர்ந்து போனான். அப்போது, “என் கிருபை போதும்” என்ற வசனம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால், இந்தக் கிருபை இப்போது என்னை என்ன செய்யச் சொல்லுகிறது என்று குழம்பித் தவித்தான். திடீரென பார்த்தபோது, ஆற்றின் நீர் மட்டம் மெதுமெதுவாக உயருவதை உணர்ந்தான். சிறிது நேரத்தில் தண்ணீர் குன்றை மறைத்து மேலாக ஓடியது. அவன், “ஆண்டவரே உமது கிருபை போதும்” என்று சொல்லி ஆனந்தமாகக் கடந்து சென்றானாம்.
கர்த்தருடைய கிருபை தடைகளை நீக்காத மாதிரி கண்களுக்குத் தெரிந்தாலும், தடைகளுக்கு மேலாக அவர் நமக்கு வழிகளை உண்டாக்குவதற்கு அவருடைய கிருபை நமக்கு நிறைவாக இருக்கிறது என்பதை நாம் நம்பவேண்டும். தடைகள் பிரச்சனைகள் சூழும்போதுதான் கர்த்தருடைய வல்லமை நம்மில் விளங்குவதற்கு தருணம் கிடைக்கிறது. அந்த வல்லமை விளங்க நம்மை அவர் பாத்திரமாக எண்ணுகிறாரே, அந்தக் கிருபை போதாதா? இப்போது பவுலுடன் சேர்ந்து, “கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்” என்று நம்மால் கூறமுடியுமா?
ஜெபம்: “அற்புதங்களின் தேவனே, தன்னுடைய பெலவீனங்களிலும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டின அப்போஸ்தலராகிய பவுலைப் போல எங்கள் துன்பதுயரத்திலும் உம்மையே துதிக்க எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.”