தேவனை மாத்திரம்
தியானம்: 2026 ஜூலை 22 புதன் | வேத வாசிப்பு: ஆதி.6:5-9; யோவான் 6:29

நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான் (ஆதியாகமம் 6:9).
பிறருக்காக வாழுவது ஒன்று; பிறரைப் பிரியப்படுத்தி வாழுவது இன்னொன்று. இதில் நாம் யார்? முதலாவது நமது தெரிவாக இருந்தாலும், வாழ்க்கையில் அநேகமாக இரண்டாவது ரக மக்களாக, தெரிந்தோ தெரியாமலோ மாறிவிடுகிறோம். ஆம், மக்களோடு மக்களாக வாழுவது மிக இலகு; ஆனால் நீதிக்கும் சத்தியத்துக்கும் தனி ஆளாக நிமிர்ந்து நிற்பது மிகவும் கடினம். ஆனால் கர்த்தர் அதையே எதிர்பார்க்கிறார். “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்…” என்று பவுல் எழுதியதை சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
பரிசுத்த வேதாகமத்திலே மிகுந்த வேதனைக்குரிய ஒரு வசனம் உண்டு: “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்று, …கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் மனஸ்தாபப்பட்டார்” (ஆதி.6:5,6). என்றாலும் பூமியில் பெருகியிருந்த அத்தனை மக்கள் மத்தியிலும் கர்த்தர் ஒருவனைக் கண்டார், அவர்தான் நோவா. இந்த “நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்.” இது எப்படி சாத்தியம்? “நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்”, இது தான் பதில். அத்தனை மக்களுக்கும் மத்தியில் ஒரு நோவா, தேவனைப் பிரியப்படுத்தினவனாக இருந்தான். ஒரு நோவாவினால் இது முடியுமானால் இன்று நம்மால் ஏன் முடியாது?
இயேசுவின் இரண்டாம் வருகையின் அடையாளமாக நோவாவின் காலம் சொல்லப்பட்டபடி இன்று அதுதான் நடக்கிறது. உலகம் என்ற மாயை வலைக்குள் அகப்பட்டு, தேவனுக்குப் பிரியமற்ற பாதையில் கர்த்தருடைய பிள்ளைகளும் தெரிந்தோ தெரியாமலோ விழுந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் இன்று எங்கே நிற்கிறோம்? ஆண்டவர் தமது சொந்த மக்களாலேயே வெறுக்கப்பட்டார், ஒதுக்கப்பட்டார், குற்றப்படுத்தப்பட்டார். ஏன்? அவர் அன்றைய யூதர்களின் வழியில் செல்லவில்லை. ஆசாரியர்கள் பரிசேயர்கள் வேதபாரகர்களின் வழிகளை இயேசு கண்டித்தார். சத்தியத்தைப் பேசினார். சகலரும் ஒருபக்கம் நிற்க, இயேசு மாத்திரம் தனியே நின்றது எப்படி? “பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்க விடவில்லை என்றார்” (யோவா.8:29). ஆம், இதுதான் இரகசியம். பிதாவுக்குப் பிரியமானவைகளை மாத்திரமே இயேசு நிறைவேற்றினார். அதற்காக உலகம் அவரைத் தூற்றியது, சிலுவை வரைக்கும் கொண்டு சென்றது. அதற்காக அவர் தோற்றுப்போனாரா? அன்று ஒரு நோவா, பின்னர் இயேசு; இன்று நம்மில் யார்? நாம் உலகத்தோடு ஒத்துப்போவதற்கு ஒரே பதில், நாம் தேவனோடு நடப்பதில்லை என்பதுதான்.
ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, உலக மக்களைப் பிரியப்படுத்தி நாங்கள் வாழாமல் உமக்குப் பிரியமானதைச் செய்ய தூயஆவியானவர் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.”