என் தாசனாகிய மோசே!

தியானம்: 2026 ஜூலை 24 வெள்ளி | வேத வாசிப்பு: உபாகமம் 3:23-28

YouTube video

…. போதும், இனி இந்தக் காரியத்தைக் குறித்து என்னோடே பேசவேண்டாம் (உபாகமம் 3:26).

“போதும், இனிமேல் இதைக் குறித்து மாத்திரம் திரும்பவும் என்னிடம் பேசவே வேண்டாம்.” இப்படி யாராவது எப்போதாவது உங்களிடம் கூறியதுண்டா? அதிலும் நமக்கு மிகவும் அன்பானவர்கள் இப்படி ஒரு வார்த்தையைச் சொன்னால் நமது மனம் பாதிக்கப்படாதா?

மோசேக்கு விரோதமாகப் பேசிய மிரியாம் ஆரோனிடம், கர்த்தர், “என் தாசனாகிய மோசே” என கூறி, “என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். நான் அவனுடன் முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்” என்று ஒரு பிரமிக்கத்தக்க சாட்சியைக் கூறுகிறார். ஆனால் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கர்த்தரே, “போதும், இந்தக் காரியத்தைக் குறித்து என்னோடே பேசவேண்டாம்” என்று மோசேயின் வாயை அடைத்துவிட்டார். ஒரு மனுஷனாக மோசேயின் இருதயம் உடைந்திருக்காதா? இதற்குரிய சம்பவத்தை எண்.20:12ல் வாசிக்கலாம். கன்மலையிடம் பேசும்படி கர்த்தர் சொன்னபோது, மக்களின் தொந்தரவினால் ஆத்திரமடைந்த மோசே கன்மலையை அடித்துவிட்டார். அவ்வளவுதான். தண்ணீர் பெருவாரியாக வந்தது. ஆனால், “இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்பொருட்டு நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியால்…” கானானுக்குள் மக்களை நடத்தும் பணியை கர்த்தர் மோசேயிடமிருந்து எடுத்து யோசுவாவுக்குக் கொடுத்துவிட்டார். மோசே பல தடவைகள் ஜெபித்தும், கர்த்தரோ, “போதும், இனிப் பேசாதே” என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

மிகுந்த சாந்தகுணமுள்ளவர் என்றும், “என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்” என்றும் கர்த்தராலே சாட்சி பெற்ற இந்த மோசேக்கா இந்த நிலைமை! கர்த்தர் இந்த மோசேக்கா இப்படிச் செய்தார் என்ற கேள்வியை நம்மில் அநேகர் மனதினுள் புதைத்து வைத்திருக்கிறோம். “என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, என்னை விசுவாசியாமற்போனபடியால்” இதுதான் பதில். கர்த்தர் பரிசுத்தர், அந்தப் பரிசுத்தத்திற்கு எவ்விதத்திலும் குலைச்சல் ஏற்படக்கூடாது என்பதில் கர்த்தரின் வைராக்கியம் நமக்கு விளங்கட்டும். பின் சந்ததிக்கு இது ஒரு எச்சரிப்பு! ஆம், 2026ல் வாழுகின்ற நமக்கும் எச்சரிப் புண்டாகும்படி இந்த சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது. அன்று மோசே கானான் பிரவேசத்தை இழந்தார். இன்று நாம் கர்த்தருடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவரது வார்த்தையைப் புறக்கணித்து நமது உணர்ச்சிகளுக்கு இடமளித்து மனம்போனபடி நடந்தால் என்னவாகும்? அதிலும் இன்று இயேசு நமக்காக தம்மையே கொடுத்து வழியை ஆயத்தம் செய்திருக்கும்போது நாம் அதை விசுவாசியாமற்போனால் நாம் எதை இழப்போம்?

ஜெபம்: நல்ல ஆண்டவரே, பரிசுத்தக்குலைச்சல் என்னில் காணப்படாதபடி கர்த்தருக்கேற்ற பரிசுத்தம் காணப்படவும் அதற்கேற்ற வைராக்கியத்தோடு நான் வாழவும் என்னை உமது பெலத்தால் நிரப்பும். ஆமென்.