நாம் பாக்கியவான்களா?
தியானம்: 2026 ஜூலை 27 திங்கள் | வேத வாசிப்பு: 1பேதுரு 4:12-16

உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து புதுமையென்று திகையாமல், … நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள் (1பேது.4:12,13).
பாக்கியவான்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றால் நாம் கருதுவது என்ன? ஆனால் இங்கே, நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள் என்று மத்தேயு இயேசு சொன்னதை நினைவுபடுத்தி மத்தேயு 5:11ல் எழுதியுள்ளார். சோதனைகள், வியாதிகள் மாத்திரமல்லாமல், கிறிஸ்துவின் வார்த்தைக்காக வைராக்கியமாக நின்று அதன்படி ஜீவிக்க முயலும்போது நம்மைச் சுற்றிலும் இந்த உலகம் அக்கினியை மூட்டி விடுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மனுஷீகத்தில் தடுமாறுகிறோம்; ஆனால் தடுமாற நாம் உலகத்தாரல்லவே!
உண்மையுள்ள கிறிஸ்தவ வாழ்வின் பதிலுரைகளை நாம் இந்த உலகிலேயே தேடிக் கண்டுகொள்ள முடியாது. ஆண்டவர் வரும்போது சகல பலன்களுக்கான வெகுமதிகளைக் கொண்டுவருவார் என்பது வேதசத்தியம். நாம் இங்கேயே பலன்களைத் தேடுவதால்தான் அடிக்கடி விழுந்துபோகிறோம். இங்கே பேதுரு தெளிவுபடுத்துகிறார்: “கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.” இதைவிட ஒரு மேலான பாக்கியம் என்னதான் உண்டு? மாத்திரமல்ல, கிறிஸ்துவுக்காக வைராக்கியமாய் நின்று பாடுகளை அனுபவிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் நம்மேல் இருக்கிறார்; அந்நியரால் அவர் தூஷிக்கப்பட்டாலும், அவர் நம்மாலே மகிமைப்படுகிறார், நம்மோடு இருக்கிறார்.
அதற்காக நமக்கு நேரிடுகிற எல்லாவித பிரச்சனைகளும், நமது நல்ல கிறிஸ்தவ வாழ்வினால்தான் உண்டாகிறதென்பது அர்த்தமல்ல. கிறிஸ்துவுக்குள் உண்மையுள்ள விசுவாசிக்கு உண்டாகும் பாடுகளுக்கும், தவறாக நடப்பதால் உண்டாகும் கஷ்டங்களுக்கும் வேறுபாடு உண்டு. பிந்தியதில் ஆவியானவர் நம்முடன் இருக்கமாட்டார்; நமது தவறுகளை நாமேதான் திருத்திக்கொள்ள வேண்டும். அதற்காகவே தான் பேதுரு 4:15ல் தெளிவாகவும் விபரமாகவும் எச்சரிப்பு கொடுத்துள்ளார். கொலை, திருட்டு, பொல்லாப்புச் செய்து, அநியாயத்திலும் அந்நிய காரியங்களிலும் ஈடுபட்டு, அதனால் பிரச்சனைகள் வருமானால் அதற்கான தண்டனையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். ஆனால், கிறிஸ்துவின் பிள்ளைகள் நாமோ. “கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளிகளாகும்படிக்கு, அதனாலுண்டாகும் சந்தோஷத்தை அனுபவிக்கும்படிக்கு அழைக்கப்பட்டுள்ளோம்.” இந்த அறிவில் நாம் பெருக வேண்டுமானால் அதற்கான பாடுகளை அனுபவிக்க பயப்படக்கூடாது. கர்த்தருக்குக் காத்திருந்து அவருடைய சித்தப்படி செய்வது, அவருடைய பாடுகளுக்குப் பங்காளிகளாகி அவரை அறிந்து அவர் குமாரனின் சாயலைப் பெறுவதற்கான வழியாகும்.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நாங்கள் உண்மைத்துவமாய் வாழும்போது எங்களுக்கு நேரிடுகிற சோதனைகள் கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளிகளாக்கும் என அறிந்து அதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் மனதை எங்களுக்குத் தாரும். ஆமென்.