தேவனுக்குப் பிரியம்!
தியானம்: 2026 ஜூலை 28 செவ்வாய் | வேத வாசிப்பு: மத்தேயு 27:35-44

உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் (மத்.5:44).
அநியாயமாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கேலிப்பேச்சுக்கும், நிந்தைக்கும் ஆளான அனுபவம் உங்களுக்கு உண்டா? அது மெய்யாகவே மனதை உடைத்துப்போடும். ஆத்திரத்தைக் கிளப்பும். அப்படிப்பட்ட சமயத்தில் நான் கிறிஸ்துவின் பிள்ளை என்று சொல்லி, அவர்களுக்கு நாம்; காட்டும் எதிர்நடவடிக்கைதான் என்ன?
அவர் நடக்காத எந்தவொரு பாதையிலும் நாம் நடக்கவேண்டும் என்று ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பாரா? பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற வந்த இயேசுவுக்கு அவருடைய இனத்தார் ஜனத்தாரிடமிருந்து கிடைத்தது நிந்தைகளும் துன்பங்களும்தான். தச்சன் மகன் என்றார்கள். பிசாசுகளின் தலைவன், மதிமயங்கியவர், புத்திதடுமாறியவர், ஜனங்களை வஞ்சிக்கிறவர், ஓய்வுநாளை மதிக்காதவர், ஆலய பாரம்பரியஙகளைக் கைக்கொள்ளாதவர், பாவிகளுக்கும் சிநேகிதன் மொத்தத்தில் இவர் தேவனிடத்திலிருந்து வரவில்லை என்று பலவிதத்தில் அவரை நிந்திந்தனர். சிலுவையில் தொங்கியபோதுகூட யூதருக்கு ராஜா என்றும் சிலுவையிலிருந்து இறங்கிவா என்றும் பரிகாசம் பண்ணினர். அதற்காக ஆண்டவர், தாம் வந்த நோக்கத்தையும் தமது பரிசுத்த வாழ்வையும் கைவிட்டாரா? அல்லது தம்மை நிந்தித்தவர்களை சபித்தாரா? அவர்களிடம் சண்டை செய்தாரா? தமது வல்லமையால் அழித்தாரா? பதிலுக்கு அவர்களுக்காக ஜெபித்தார்.
தேவபிள்ளையே, சிந்தித்துப்பார். இயேசுவைவிட நாம் என்ன நிந்தைகளைச் சந்தித்துவிட்டோம். இன்னும் சொல்லப்போனால் நமக்கு ஏற்படும் நிந்தைகளில் அநேகமானவற்றுக்கு ஏதோவொரு காரணம் நம்மில் இருக்கிறது. ஆனாலும் நிந்திக்கப்படுவது வேதனைதான். இங்கே பேதுரு எழுதுவதை நாம் கவனிப்பது நல்லது. நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள் (1பேது.2:20,21).
இப்படியிருக்க நமது காரியம் என்ன? ஆண்டவர் நமக்கு வைத்துப்போன மாதிரியைப் பின்பற்ற வேண்டுமானால் நமது பெருமை வைராக்கியம் யாவையும் விட்டு வெளியே வரவேண்டும். பாரம்பரியங்கள், கொள்கைகளைவிட்டுப் புறப்பட வேண்டும். நிந்தனை யாரிடமிருந்து வருகிறதோ, அவர்களுக்கே ஆசீர்வாதத்தின் பாத்திரங்களாக நாம் மாறவேண்டும். தேவனுக்குப் பிரியமான இந்த வழியில் நாமும் நடப்போமா?
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, உமது நாமத்தினிமித்தம் நிந்தைகளை அனுபவிப்பதாயினும், அவற்றை பொறுமையோடே சகிக்க உமது கிருபைகளைத் தாரும். ஆமென்.