பரமசித்தமா? பாரம்பரியமா?

தியானம்: 2026 ஜூலை 29 புதன் | வேத வாசிப்பு: லூக்கா 13:10-17

YouTube video

சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில்லையா என்றார் (லூக்.13:16).

ஓய்வுநாளிலே ஒருவனை சுகப்படுத்தியதற்காக, நியாயப்பிரமாணத்தை மீறுகிறவர் என்ற குற்றச்சாட்டு ஆண்டவர்மேல் சுமத்தப்பட்டது. சுகமடைந்தவன் தன் படுக்கையை எடுத்துக்கொண்டு போனதே பிரச்சனையாயிற்று. நியாயப்பிரமாணத்தை அழிக்கவல்ல, நிறைவேற்றவே வந்தேன் என்று சொன்ன இயேசு நியாயப்பிரமாணத்தை மீறினாரா? இல்லை. ஓய்வுநாள் ஆசரிப்பு என்பது கடவுள் நமக்குள் ஓய்ந்திருக்கும்படி, நாம் அவருக்குள் ஓய்ந்திருப்பதற்காகக் கொடுக்கப்பட்டது. பக்தியோடு அனுசரிக்கப்படவேண்டிய இது, பயத்தோடே அனுசரிக்கின்ற பாரம்பரியமாயிற்று. ஓய்வுநாளின் மேன்மையை பாரம்பரியம் மறைத்துவிட்டிருந்தது. இயேசு ஓய்வுநாளை ஆசரித்தார். ஆனால் மனிதன் ஏற்படுத்திய பாரம்பரியங்களைவிட ஆத்துமா அவருக்கு முக்கியமாயிருந்தது. ஒரு மனிதனை விடுதலையாக்குவதற்கு அது ஓய்வுநாளா இல்லையா என்று பார்த்துக்கொண்டிருக்கவில்லை. இதனால் ஆண்டவர் நிந்தைக்குள்ளானார். ஆனால் தேவசித்தமே அவருக்கு முக்கியமாயிற்று.

நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது மக்களின் ஒழுக்கத்திற்காக, பாவத்தை இனங்காணுவதற்காக, சுகாதார சுத்தத்திற்காக. ஆனால் நாளடைவில் அதுவே பாரம்பரியமாகிவிட்டது. இன்றும் அதேபோல பல பாரம்பரியங்கள் நமக்குள்ளும் கலந்துபோயிருக்கிறது. ஆனால் பாரம்பரியங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தேவசித்தத்திற்கும் ஆத்தும விடுதலைக்கும் கொடுக்கப்படுவதில்லை. மறுபுறத்தில் உலகக் காரியங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தேவசித்தத்துக்குக் கொடுக்கப்படுவதில்லை. சிலருக்கு ஞாயிறு ஆராதனைக்குப் போகமுடியாத அளவிற்கு பல உலக காரியங்களும் படிப்புகளும் முக்கியமாகிவிட்டது. மொத்தத்தில் இன்று பாரம்பரியமும் சரியாக இல்லை. கிறஸ்தவ ஒழுக்கமும் இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. இது நமக்கு ஆபத்தைக் கொண்டுவரும்.

அருமையான தேவபிள்ளையே, எந்த நிந்தை, கஷ்டம் வந்தாலும் கர்த்தருக்கும் அவருடைய விருப்பத்துக்கும் கொடுக்கவேண்டிய கனத்தையும் மதிப்பையும் நாம் களவாடக்கூடாது. பாரம்பரியம் நல்லதுதான். ஆனால் அதற்கும்மேல் பரமனின் சித்தமே நமக்கு முக்கியம். ஓய்வுநாள் ஒரு பாரம்பரியமா? இல்லை. அது முழுமனதோடு தேவசமுகத்தில் கழிக்கவேண்டிய நாள். தேவனுக்கென்று நாம் உழைக்கவேண்டிய நாள். சிந்திப்போம்.

மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார் (மத்.12:8)

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நிந்தனைகள் மத்தியிலும் பாரம்பரியங்களைப் பாராமல், தேவனுடைய சித்தத்தை நீர் நிறைவேற்றினதுபோல, நாங்களும் எந்தச் சூழ்நிலையிலும் உமது சித்தத்தை நிறைவேற்றுபவர்களாக காணப்பட எங்களுக்கு பெலன் தாரும். ஆமென்.