ஆலோசனையும் வழிநடத்துதலும்
தியானம்: 2026 ஆகஸ்டு 3 திங்கள் | வேத வாசிப்பு: யோசுவா 1:1-9

பலங்கொண்டு திட மனதாயிரு; …. நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய் (யோசு.1:6).
புதிதாகப் பதவி ஏற்கும்போது, பலவிதமான ஆலோசனைகளும், விதிமுறைகளும் சொல்லப்படுவது இயல்பு. அதுபோலவே தேவனும் இங்கே யோசுவாவுக்குச் சொல்லுகிறார். எகிப்தில் இருந்து புறப்பட்டவர்களில் இந்த யோசுவாவையும், காலேப்பையும் தவிர மற்ற அனைவருமே வானாந்தரத்திலே மாண்டுபோனார்கள். அடுத்த சந்ததியே கானானுக்குள் சென்றது.
கர்த்தர் கொடுக்கிற ஒரேயொரு ஆலோசனை, தமது வார்த்தையாகிய “இந்த நியாயப்பிரமாணப் புத்தகம் உனது வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும் படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அதைவிட்டு வலது இடதுபுறம் சாயாதே. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்” என்பதேயாகும் (யோசு.1:8). தேவனுடைய வழியில் நடப்பதற்கு தேவவார்த்தைதான் வழிகாட்டி. அதற்காகவே தேவன் தமது வார்த்தைகளைக் கொடுத்தார். அது எப்பொழுதும் நமது ஞாபகத்தில் இருக்கவேண்டுமானால் அதை இரவும் பகலும் தியானித்து, அதை நமக்கு முன்பாக வைத்திருக்கவேண்டும். அப்பொழுதே நாம் வலது இடதுபுறம் சாயாமல் தேவன் நடத்தும் பாதையில் செம்மையாய் செல்லமுடியும். இத்தனை திரளான மக்களை வழிநடத்திச் செல்வது என்பது எவ்வளவு பெரியதொரு பொறுப்பு. அதற்கு வழிநடத்துதல் அவசியமே; அந்த வழி நடத்துதல் அவரது வார்த்தையிலேயே உள்ளது.
இன்றும்கூட நாம் பலவேளைகளிலும் என்ன செய்வது என்று திகைத்துத் தடுமாறி நிற்கும் வேளைகளில் நமக்கு வழிநடத்துதலை தருவது தேவ வார்த்தையாகிய வேதமே. நம்மில் எத்தனைபேர் அந்த வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்களாக வாழ விரும்புகிறோம்? இல்லாவிட்டால் சுயபுத்தியின்மேல் சாய்ந்தவர்களாக, நமது விருப்பங்களை முன்வைத்து, நமது இஷ்டம்போல தீர்மானங்களை எடுத்து வாழத் துணிந்து விடுகிறோமா? நமக்குச் சாதகமான பதில்களைத் தரும்போது தேவவார்த்தைகளை பற்றிக்கொள்ளும் நாம், நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத பதில்களைத் தரும்போது, அதை உதாசீனம் செய்து விட்டு நமது புத்திசொல்லுகிறபடி நடக்கத் துணிகிறோமா? யோசுவாவுக்குத் தேவன் வாக்குக்கொடுத்தார். “பலங்கொண்டு திடமனதாயிரு. நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் எவனும் உனக்கு எதிரே எழும்புவதில்லை.” அதே வாக்கை இன்றும் தேவன் நமக்குக் கொடுக்க வல்லவராய் இருக்கிறார். அதற்கு முன்னர், நாம் அவர் வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படிக்கு கர்த்தர் நம்மை அழைக்கிறார். இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது (உபா.6:6).
ஜெபம்: நல்ல ஆண்டவரே, வேதவசனங்கள் எங்கள் இருதயத்தில் எழுதப்படும்படி கருத்தாய் வாசித்து தியானிக்க தூயஆவியானவர் உதவி செய்ய ஜெபிக்கிறோம். ஆமென்.