உலகமோ ஆவியோ…
தியானம்: 2026 ஆகஸ்டு 7 வெள்ளி | வேத வாசிப்பு: யோசுவா 7:16-26

ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல ….. வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு (எபேசி. 6:12).
உலகில் பிறந்த எவனும் வெற்றியை நோக்கியே பயணிக்கிறான். யதார்த்தத்தில் எவருமே தோல்வியை விரும்புவதும் இல்லை. தோல்வியை எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் ஒரு கிறிஸ்தவன், அவன் உலகப்பிரகாரமான வெற்றியையா அல்லது, ஆவிக்குரிய வெற்றியையா, எதை நாடவேண்டும்? ஆகான் பிழை செய்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. “மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்” என்று ஆகானும் தன் பாவத்தை அறிக்கையிடுகிறான். ஆனால் அவன் தேவனுடைய வார்த்தையை மீறியபடியால், அதற்குரிய தண்டனை அவன்மீது வந்தது. அவனோடுகூட முழுக் குடும்பமும் கொலை செய்யப்பட்டது. அதற்கு முன் நடந்தது என்ன? இஸ்ரவேலர் ஆயி பட்டணத்தைப் பிடிக்கச் செல்கின்றனர். எரிகோவில் பெரிய வெற்றியைக் கண்டவர்கள், ஆயி ஒரு சிறிய பட்டணம்தானே என்று சொல்லி, மூவாயிரம் பேர் மாத்திரம் துணிந்து புறப்பட்டுப் போகிறார்கள். ஆனால் எதிர்பாராமல் இஸ்ரவேலர், ஆயி மக்களால் முறியடிக்கப்பட்டு திரும்பினர். இப்பொழுது தேவனிடத்தில் முறையிட்டபோது, தேவன், “நீங்கள் பாவம் செய்தீர்கள்” என்கிறார். இங்கே உலகரீதியான வெற்றியை இழந்ததற்குக் காரணம், அவர்களுக்குள் இருந்த பாவமே என்பதைக் கர்த்தர் உணர்த்துகிறார். அதைக் கண்டுபிடியுங்கள் என்கிறார். பாவம் செய்தவனுக்கான தண்டனை முதலில் கொடுக்கப்பட்டு, இஸ்ரவேலுக்குள்ளிருக்கும் பாவத்தை அகற்றும்படி கர்த்தர் கட்டளை கொடுத்தார். அதன் பின்னர் வெற்றி தானாக வரும் என்பதை உணர்த்தினார்.
இன்று நாம் உலகரீதியான விஷயங்களுக்கும், வெற்றிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் ஆவிக்குரிய காரியங்களுக்கும், ஆவிக்குரிய போராட்டங்களுக்கும் நம் வாழ்வில் முக்கியத்துவம் கொடுப்பதுண்டா? அன்று ஆகான் தன் பாவத்தை மறைத்து வைத்தான். இன்றும் முதலில் நமக்குள் மறைந்திருக்கிற பாவத்தை முதலில் கண்டுகொண்டு அதைச் சரிசெய்யும் வரைக்கும் நாம் உலக ரீதியான வெற்றிகளை எதிர் பார்ப்பது எப்படி? ஆம், பவுல் இதை அழகாக விளக்கியுள்ளார். “மாம்சத் தோடும் இரத்தத்தோடும் அல்ல, துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும் இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களின் பொல்லாத ஆவிகளின் சேனைகளோடுங்கூட நமக்கு போராட்டம் உண்டு.” முதலில் நாம் இந்தப் போராட்டத்தைக் குறித்து உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். இங்கேதான் நமது வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படுகிறது. உலக வெற்றிகள் நாளை மாறிப்போகும். நமக்குள் மறைவாயுள்ள பாவத்தை அகற்றிவிடும்வரைக்கும் மெய்யான வெற்றியை நம்மால் கண்டுகொள்ள முடியாது. அதை உணர்ந்து, நம்மை ஆராய்ந்து தேவனிடம் சரணடைவோமாக.
ஜெபம்: அன்பின்தேவனே, நீர் எங்கள் இருதயத்தை ஆராய்ந்து அறிகிறீர். மறைவான குற்றங்களுக்கு எங்களை விலக்கிக் காத்தருளும். ஆமென்.