எது தேவனுக்குப் பிரியம்?
தியானம்: 2026 ஆகஸ்டு 8 சனி | வேத வாசிப்பு: யோசுவா 8:30-35

…. நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான் (யோசுவா 8:34).
தேவனுக்காகப் பணியாற்றுகின்ற நாம், அந்தப் பணிகளில் தேவன் பிரியப்படுகிறாரா என்று நம்மை நாமே கேட்டுப் பார்த்திருக்கிறோமா? இல்லாவிட்டால் நாம் நமது இஷ்டம்போல செய்துகொண்டு, நாம் தேவனுக்குத்தான் ஊழியம் செய்கிறோம் என்ற எண்ணத்திலும் கற்பனையிலும் வாழுகிறோமா? இங்கே இஸ்ரவேலர் ஆயி பட்டணத்தைப் பிடித்த பின்னர், தேவனுக்காக ஒரு பலிபீடத்தைக்கட்ட முற்பட்டபோது, யோசுவா அங்கே மோசே சொன்னபடியெல்லாம், தேவனுடைய கட்டளைக்கு உட்பட்டதாகவே அதைக் கட்டுவதைக் காண்கிறோம். அதுமட்டுமல்லாது, நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அதில் சொல்லப்பட்ட ஆசீர்வாதத்தையும், சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் யோசுவா வாசித்தான். தேவனுக்கு நாம்தானே பலிபீடத்தைக் கட்டுகிறோம், அதை எப்படி வேண்டுமானாலும் கட்டிவிட்டு போகலாம் என்று அவர்கள் எண்ணவில்லை. தேவன் கட்டளையிட்டபடியே சரியாகச் செய்வதையே விரும்பினார்கள். அப்படிச் செய்தால்தான் அது தேவனுக்குப் பிரியமானதாய் இருக்கும். அதில் செலுத்தும் பலியும் அவருக்கு சுகந்த வாசனையாய் இருக்கும் என்பதை உணர்ந்தார்கள்.
காயீனும் ஆபேலும் தேவனுக்குக் காணிக்கை கொண்டுவந்தபோது, காயீன் நிலத்தின் விளைச்சலில் சிலவற்றைக் கொடுக்க நினைத்தான். ஆனால் ஆபேலோ தனது மந்தையின் தலையீற்றில் கொழுமையானதைத் திறமானதைத் தெரிந்தெடுத்துக் கொடுக்க நினைத்தான். தேவன் ஆபேலின் காணிக்கையை அங்கீகரித்தார். ஆனால் காயீனுடையது நிராகரிக்கப்பட்டது. அதுபோலவே தேவனுக்குக் கொடுப்பதும், நாம் செய்யும் பணிகளும் அவருக்குப் பிரியமானதாய் இருப்பது அவசியமானதே.
“ஒருவன் என்னில் அன்பாய் இருந்தால், அவன் என் வார்த்தைகளைக் கைக்கொள்வான்” என்று இயேசு சொன்னார். அப்படியாயின் நாம் அவருடைய வார்த்தைக்கு உட்பட்டுச் செய்யும் காரியங்களே அவருக்குப் பிரியமானதாய் இருக்கும் அல்லவா! அவருடைய வார்த்தைக்குக் கட்டுப்படாமல் நாம் செய்யும் எந்தக் காரியமும் விருதாவாகவே போகும் என்பதை நினைவிற்கொள்வோம். இன்று அநேகர் பிறருக்கு உதவி செய்வதாகவும், தங்களையே ஒறுத்துச் செய்வதாகவும் பெருமையாகப் பேசிக்கொள்வர். அதிலே அவர்களுக்குத்தான் பெருமை சேருகிறதேதவிர, தேவனுக்கல்ல என்பதை அவர்கள் புரியாதிருக்கின்றனர். நாம் நமக்குப் பிரியமானதையல்ல, தேவனுக்குப் பிரியமானதைச் செய்ய பிரயாசப்படுவோம். “தேவனே, உமக்குப் பிரியமானதைச்செய்ய எனக்குப் போதித்தருளும்; நீரே என் தேவன், உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக” (சங்.143:10). இன்று இந்த ஜெபம் நம்முடையதாகட்டும்.
ஜெபம்: தூயஆவியானவரே, கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று சோதித்து, அவ்வழியில் நடந்து உமது நாமத்தை மகிமைப்படுத்த எங்களுக்குதவும். ஆமென்.