தேவன் கனப்படுத்தினார்
தியானம்: 2026 ஆகஸ்டு 11 செவ்வாய் | வேத வாசிப்பு: யோசுவா 10:12-43

இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை (யோசுவா 10:14).
மனிதராகிய நாம் எப்போதும் தேவனைக் கனப்படுத்தி வாழவேண்டும் என்றும், அவரது வார்த்தைக்கு வாழ்வில் முக்கியத்துவம் கொடுத்து வாழ வேண்டும் என்றும் பலவிதமான போதனைகளை அன்றாட வாழ்விலே நாம் கேட்டு வந்திருக்கலாம். இன்று கர்த்தர் ஒரு மனிதனின் சொல் கேட்டு ஒரு அதிசய காரியத்தை உடனடியாகவே செய்தார், ஒரு புதிய காரியத்தை செய்தார் என்பதைக் காணப்போகிறோம். ஆம், நடுவானில் சூரியனும் சந்திரனும் அப்படியே அசையாமல் நின்றது. இது எப்படி? “யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக… சூரியனை கிபியோன் மேலும், சந்திரனை ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நிற்கும்படி கட்டளை கொடுத்தார்.” அது அப்படியே நிற்கலாயிற்று. ஆம், கர்த்தரே இதைச் செய்தார்.
யோசுவாவை தேவபணிக்கு தேவன் அழைத்தபோது, தம்முடைய கட்டளைப்படி செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருக்கும்படிக்கும் சொன்னார். யோசுவா ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவனின் கட்டளைப்படி, மோசே தனக்குக் கற்றுக்கொடுத்தபடி யாவையும் செய்து வந்தார். தேவனுடைய வார்த்தையில் சற்றும் பிசகாமல் அதைப் பின்பற்றி, தேவனுக்குப் பிரியமாய் நடந்துகொண்ட யோசுவாவின் வார்த்தையை தேவன் இங்கே கனப்படுத்தினார்.
தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அந்த வார்த்தையின்படி நாமும் வாழுவோமானால், யோசுவாவுடன் கூடவேயிருந்து அதிசயங்களைச் செய்த தேவன் நம்மை விட்டுவிடுவாரா? பிதாவின் சித்தத்தைச் செய்யவென்று உலகிற்கு வந்த இயேசு, உலகில் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும், பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதையே தம்முடைய உயிர்மூச்சாய் கொண்டிருந்தார். பிதாவும் அவரது வார்த்தைக்கு எப்போதும் செவிகொடுப்பவராய் இருந்தார். இயேசு அற்புதங்களைச் செய்தார், வியாதியஸ்தரைக் குணமாக்கினார், பிசாசுகளைத் துரத்தினார். இவைகள் அனைத்தையும் இயேசு செய்தபோது, அவர் எங்களைப் போலவே இந்த உலகில் ஒரு முழுமனுஷனாகவே இருந்தார். ஆதலால் பிதா அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தார். பிதாவுக்கும் குமாரனுக்கும் நெருக்கமான உறவு இருந்தது. பிதாவோடு அனுதினமும் இயேசு நேரம் செலவிட்டார்.
இயேசு பிதாவோடு நெருங்கிய உறவில் இருந்ததுபோல, யோசுவா தேவனுடைய வார்த்தைக்கு தன் வாழ்வில் முக்கியத்துவம் கொடுத்ததுபோல, நாமும் தேவனோடு நெருங்கிய உறவில் இருந்தால், நமது வாழ்விலும் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்ய வல்லவராய் இருக்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை.
ஜெபம்: சர்;வவல்ல தேவனே, தேவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் அளித்து உம்மோடு நெருங்கிய உறவில் யோசுவா இருந்ததுபோல நாங்களும் வாழ்ந்திருக்க உமதருள் தாரும். ஆமென்.