அடைக்கலப்பட்டணம்
தியானம்: 2026 ஆகஸ்டு 12 புதன் | வேத வாசிப்பு: யோசுவா 20:1-9

அவைகள் உங்களுக்கு இரத்தப்பழி வாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப் போயிருக்கத்தக்க அடைக்கலமாயிருக்கும் (யோசுவா 20:3).
நியாயப்பிரமாணக் காலத்திலே கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று குற்றம் செய்தவனுக்கு உடனடியாகவே தண்டனை என்னவென்பதும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இப்போது தேவன் யோசுவாவுக்கு அடைக்கலப் பட்டணங்களை ஏற்படுத்தும்படி கட்டளையிடுகிறார். காரணம், கைபிசகாய் யாதொருவன் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டால் அவனை சபைக்கு முன்பாக நிறுத்தி, விசாரிக்கும் மட்டும் அவன் பாதுகாப்பாக இருப்பதற்காகவே இந்த அடைக்கலப் பட்டணங்கள்! கர்த்தர் நீதியுள்ளவர் அல்லவா! கைப்பிசகாய் ஒருவன் குற்றம் செய்தால், அவனது குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவன் அவனைப் பழிதீர்ப்பதற்காகத் துரத்தி வரும்போது, அவன் ஓடிச்சென்று இந்த அடைக்கலப் பட்டணத்தில் தஞ்சம் புகுவானேயாகில் அவன் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிக்கொள்வான். ஆனால், அவன் அடைக்கலப் பட்டணத்திற்குள் போய்ச் சேருவதற்கு முன் பழிவாங்குகிறவனுடைய கைகளில் பிடிபட்டால், அவன் பழிதீர்க்கப்படலாம். ஆக, அடைக்கலப் பட்டணம் குற்றம் செய்தவனுக்கு தற்காலிக அடைக்கலத்தைக் கொடுக்கிறது.
நாம் பாவிகளாய் இருக்கையில் நமக்குக் கிடைக்கவேண்டிய தண்டனையிலிருந்து நம்மை விடுவிப்பதற்காக, கிறிஸ்து நமக்காகச் சிலுவையில் மரித்து, நமது பாவத்தின் தண்டனையைத் தாமே ஏற்றுக்கொண்டு, நமக்கு அவர் ஒரு அடைக்கலப் பட்டணமாய் விளங்குகிறார். ஆனால் நாம்தான் கிறிஸ்துவாகிய அந்த அடைக்கலப் பட்டணத்தை நாடி வரவேண்டும். கிறிஸ்துவாகிய அடைக்கலப் பட்டணம் நமக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. நமக்காக அவர் எல்லாவற்றையும் முடித்தவராக இருக்கிறார். அதை நாம் விசுவாசித்து ஏற்றுக்கொண்டு, அவரிடத்தில் ஓடிவரும்போது, அவர் நம்மையும் ஏற்றுக்கொள்ள வல்லவராய் இருக்கிறார். அடைக்கலப் பட்டணம் இருப்பதை அறிந்திருந்தும், ஒருவன் அன்று அதைத் தேடி ஓடி வராவிட்டால், எப்படி அழிந்து போவானோ, அதுபோலவே, கிறிஸ்துவின் அன்பையும், அடைக்கலத்தையும் அறிந்திருந்தும், அவரைத் தேடி ஒடிவராவிட்டால், அவனும் தன் ஆத்தும இரட்சிப்பை இழந்துபோவான்.
இன்று நமது நிலைமை என்ன? மீட்பு அருகாமையில் இருக்குபோது அதைத் தேடி ஓடாமலும், அதை ஏற்றுக்கொள்ளாமலும் இருப்பதும் முட்டாள்தனமான காரியம். ஆனால் நமக்கு மீட்பரையும் தெரியும், மீட்பும் தெரியும். என்றாலும் துணிகரமாக நாம் நடப்போமானால் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்வது கடினமே. இரட்சண்ய நாள் இன்றே! நாம் கிறிஸ்தவர்கள்தான், ஆனால் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோமா? நம்மை நாமே நிதானித்து அறிந்து கிறிஸ்துவிடம் சேர்ந்து அவரது அடைக்கலத்தைப் பெற்றுக்கொள்வோம்.
ஜெபம்: அன்பின் தகப்பனே, எங்களை அழிக்க நினைத்த சத்துருவின் கையிலிருந்து எங்களை விடுவித்து, எங்களுக்கு அடைக்கலமாயிருந்தீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.