நீ தேவனுக்கு வேண்டும்
தியானம்: 2026 ஆகஸ்டு 18 செவ்வாய் | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 4:1-23

அதற்குப் பாராக்: நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடேகூட வராவிட்டால், நான் போகமாட்டேன் (நியா.4:8).
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத காலகட்டத்திலும், தேவன் இஸ்ரவேலரை நியாயம் விசாரிக்க தெபொராள் என்ற ஒரு பெண்ணை நியமித்திருந்தார். அவள் ஒரு தீர்க்கதரிசியாக இருந்து இஸ்ரவேலரை நியாயம் விசாரித்து வந்தாள்.
இப்பொழுது இஸ்ரவேலர் மீண்டும் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்ததால், கர்த்தர் அவர்களைக் கானானியருடைய ராஜாவின் கைகளில் விற்றுப்போட்டார். அவனது சிசெரா என்னும் சேனாதிபதி, பலத்த படைபலம் கொண்டவனாயிருந்தான். இந்நேரத்தில் தெபொராள் மூலமாக நப்தலி கோத்திரத்தானான பாராக்குக்கு, “நீ புறப்பட்டுப் போ, நான் சிசெராவை உனது கைகளில் ஒப்புக்கொடுப்பேன்” என்ற தேவசெய்தி வருகிறது. ஆனால் அவனோ நான் போவதாயின் “நீயும் என்னோடு வரவேண்டும்” என்று தெபொராளை துணைக்கு அழைக்கிறான். அதற்கு தெபொராள், “நான் உன்னோடே கூட வருகிறேன். ஆனால் இந்த வெற்றியின் மகிமை உனக்கு கிடைக்காது. தேவன் அதை ஒரு பெண்ணுக்கே கொடுப்பார்” என்று தீர்க்கதரிசனம் உரைக்கிறாள். அதுபோலவே சிசெராவையும் அவன் சேனைகளையும் பாராக் முறியடித்தபோது, சிசெரா தப்பியோடி யாகேலின் வீட்டுக்கு வருகிறான். யாகேல் அவனுக்கு அடைக்கலம் கொடுப்பதுபோலக் கொடுத்து, அவன் நித்திரை செய்தபோது அவன் நெற்றியிலே கூடார ஆணியை அடித்துப்போட்டு, அவனைக் கொலை செய்தாள். கர்த்தர் சொன்னது போலவே, சிசெரா ஒரு பெண்ணின் கைகளினால் செத்து மடிந்தான்.
இந்த இடத்தில் இரண்டு பெண்களினால் இஸ்ரவேலுக்கு மீட்பு வந்ததைக் காண்கிறோம். ஆண்டவர் இயேசுவின் வம்ச வரலாற்றிலும் பெண்கள் இடம்பிடித்திருப்பதைக் காண்கிறோம். ஆண்டவர் உயிர்த்த ஆண்டவராக ஒரு பெண்ணுக்கே முதல் தரிசனத்தைக் கொடுக்கிறார். ஆகவே பெண்களும் அவருடைய பார்வையில் முக்கியமானவர்களே!
“என்னால் எதுவும் முடியாது, எதற்கும் தகுதியற்றவள்” என்று பல பெண்கள் தங்களைத் தாங்களே ஒதுக்கி வாழுகிறார்கள். தேவனின் பார்வையில் நாம் ஒவ்வொருவருமே அருமையானவர்கள் என்பதை மறக்கக்கூடாது. தேவனால் நம்மைக்கொண்டும் பலத்த காரியங்களைச் செய்யமுடியும். தெபொராள், மரியாள், மார்த்தாள், ரூத், எஸ்தர் இவர்கள் எல்லாரையும் தேவன் தமது திட்டத்தில் உபயோகித்துள்ளார். அப்படியானால் நாமும் அவருக்குத் தேவையானவர்களே. அவருடைய சித்தத்திற்கு நமது வாழ்வைத் தத்தம் செய்து வாழும்போது, அவர் நம்மையும் தமக்காகவே பயன்படுத்துவார். கர்த்தர் எனக்குப் பராக்கிரமசாலிகளின்மேல் ஆளுகை தந்தார் (நியாயா.5:13).
ஜெபம்: அன்பின் தேவனே, எங்கள் ஒவ்வொருவருக்குமான திட்டத்தை நீர் வைத்திருக்கிறீர். அவைகள் எங்கள் வாழ்வில் நிறைவேற எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.