கற்பனையை மீறினார்கள்
தியானம்: 2026 ஆகஸ்டு 19 புதன் | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 6:1-10

இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் … அடைக்கலங்களாக்கிக் கொண்டார்கள் (நியாயாதி. 6:2).
மீண்டும் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப் பானதைச் செய்ததால் கர்த்தர் அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார். நாமொன்றும் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல. இப்படித்தான் பாவத்தில் விழுவதும் எழுவதுமாகவே இருக்கிறோம். ஆனால் ஒன்று கிருபையின் காலத்தில் வாழ்வதால் நமக்கு உடனுக்குடன் இஸ்ரவேலரைப்போல் தேவனுடைய கோபாக்கினைக்குட்படாமல் தப்பி வாழுகிறோம். அதற்காக தேவனுடைய கிருபையை அற்பமாக எண்ணாதிருப்போமாக.
இங்கே மீதியானியருக்கு இஸ்ரவேலர் பயந்ததினால் தாங்கள் மறைந்திருப்பதற்காக மலைகளையும், குகைகளையும் தங்களுக்கு அரணான ஸ்தலங்களாக்கி, அதிலே அடைக்கலங்கொண்டார்கள். இஸ்ரவேலர் விதை விதைக்கின்றபோதும், மீதியானியர் அவர்களுடைய விளைச்சலைக் கெடுத்து, யாவையும் கொள்ளையாடிச் செல்வதால் இஸ்ரவேலர் பசி பட்டினியால் வாடினார்கள். அவர்களுடைய ஆடு மாடுகளையும் கொள்ளையாடிச் சென்றார்கள். இதனால் இஸ்ரவேலர் மீதியானியரால் மிகவும் சிறுமைப்படுத்தப்பட்ட போது, அவர்கள் தேவனை நோக்கிக் கூப்பிட்டார்கள்.
இப்பொழுது தேவன் தீர்க்கதரிசி மூலமாகப் பேசுகிறார். “நான் உங்களை அடிமைத்தன வீடாகிய எகிப்தில் இருந்து மீட்டுவந்த நாள் முதலாக என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியுங்கள், புற இன தேவர்களை ஆராதிக்காதிருங்கள் என்று எவ்வளவு சொல்லியும் நீங்களோ என் சொல்லைக் கேளாதே போனீர்கள்” என்பதைக் கர்த்தர் உணர்த்துகிறார். அதன் பின்னர் அவர்களை மீண்டும் விடுவிக்க கர்த்தர் ஒருவரை எழுப்புகிறார். நமது வாழ்வில் பிரச்சனைகள் வரும்போது, கர்த்தர் கைவிட்டாரே என்று முறுமுறுக்காமல், நாம் எங்கே கர்த்தரை விட்டோம் என்று அவருடைய சமுகத்தில் நின்று நம்மை நாமே ஆராய்ந்து பார்க்கவேண்டும். நான் தேவனுடைய வழியை விட்டு விலகியிருக்கிறேனா? அல்லது, பிரச்சனைக்கு எந்த விதத்திலாகிலும் நான் காரணமாய் இருந்திருக்கிறேனா என்பதை ஆராய்ந்து நம்மைச் சரிப்படுத்த வேண்டியதே முக்கியம்.
நாம் கிருபையின் காலத்தில் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு அசதியாய் இராதிருப்போமாக… எல்லாவற்றையும் தேவன் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தும் காலம் தொலைவில் இல்லை. இன்றே இரட்சண்ய நாள்; நாம் தேவனுடைய சமுகத்திற்கு வந்து, அவரது மன்னிப்பைப் பெற்று அவருக்குள் நம்மைப் புதுப்பித்துக்கொள்வோமாக. இதோ, இப்பொழுதே அநுக்கிரகக் காலம், இப்பொழுதே இரட்சணியநாள் (2கொரி.6:2).
ஜெபம்: பரம பிதாவே, அடிக்கடி வழுவிப்போகிற இருதயமுடையவர்களாய் இராதபடி, வேதவசன எச்சரிப்புகளுக்கு செவிகொடுத்து மனந்திரும்ப எங்களுக்குதவும். ஆமென்.