கர்த்தரின் யுத்தம்
தியானம்: 2026 ஆகஸ்டு 21 வெள்ளி | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 7:1-25

அன்று ராத்திரி கர்த்தர் அவனை நோக்கி: நீ எழுந்து, அந்தச் சேனையினிடத்திற்குப் போ; அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் (நியாயா. 7:9).
மீதியானியரோடு யுத்தம் செய்வதற்காக, கிதியோன் முப்பத்திமூவாயிரம் பேரைச் சேர்த்துக்கொண்டு ஆயத்தமாக இருக்கிறார். ஆனால் கர்த்தரோ, “இத்தனை பேர் மிகவும் அதிகம். எங்கள் கையே எங்களை இரட்சித்தது என்று அவர்கள் சொல்லிப் பெருமைப்படும் அளவிற்கு இது இருக்கிறது. எனவே பயமுள்ளவர்கள் திரும்பிப் போகும்படிக்குச் சொல்லு” என்கிறார். அப்போது இருபத்தீராயிரம் பேர் அங்கிருந்து போய்விட்டனர். பயம், கர்த்தர் மீதுள்ள விசுவாசத்தைப் பின் தள்ளும்.
கர்த்தர் கிதியோனிடம், “ஜனங்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணு, அங்கே அவர்களைப் பரீட்சித்துக் காட்டுவேன்;” என்கிறார். தண்ணீர் அண்டையிலே வந்தபோது, அவர்களின் முன்னூறு பேர் மாத்திரமே கையினால் நீரை அள்ளி நாவினாலே நக்கிக் குடித்தார்கள். மற்றவர்களோ முழங்கால் ஊன்றிக் குனிந்து குடித்தார்கள். கர்த்தரோ எச்சரிப்புடன் செயற்பட்ட அந்த முன்னூறு பேரை மாத்திரமே தெரிந்துகொண்டார். அவர்கள் தங்கள் பொறுப்பில் எச்சரிக்கையுடன் இருந்தார்கள். மற்றவர்களோ ஆற அமர முழங்காற்படியிட்டு தண்ணீரைக் குடித்து தங்கள் தாகத்தைத் தீர்ப்பதிலேயே கண்ணாயிருந்தார்கள்.
கர்த்தர் கிதியோனிடம், “இந்த முன்னூறு பேருடனே புறப்பட்டுப் போ, மீதியானியரை உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்” என்றார். இங்கே, “அவர்களை நான் உன் கையிலே ஒப்புக்கொடுத்து விட்டேன்” என்று முடிந்த விஷயமாகக் கூறுவதைக் காண்கிறோம். கிதியோனும் அவனோடுகூட முன்னூறு பேரும் மீதியானியருக்கு எதிராகப் போனாலும், மீதியானியர் மேலே வெற்றியைக் கொடுத்தது கர்த்தர் ஒருவரேயாகும். இது இஸ்ரவேலரின் யுத்தமல்ல, இது அவர்களுடைய கர்த்தரின் யுத்தம்.
இன்று நாமும் பலவிதமான தனிப்பட்ட போராட்டங்களோடும், அநீதிக்கு எதிரான சமூக போராட்டங்களோடும் போராடவேண்டி வரும்போது கர்த்தரையே நம்பி அவரை நோக்கி வேண்டி நிற்கலாம். கர்த்தரை நம்பியிருக்கும்போது, அவரே நமக்காக யுத்தம் செய்கிறவராக இருக்கிறார். அன்று யுத்தத்துக்காக அந்த முந்நூறு பேரிடம் கொடுக்கப்பட்டது ஈட்டியோ வாளோ அல்ல; வெறும் பானையும் அதற்குள் தீவட்டியும், எக்காளமும்தான். இப்படியும் போர் செய்வார்களா? கர்த்தர் சொன்னபடியே செய்தபோது, சத்துரு முறிந்து ஓடிப் போனான். கர்த்தர் என்ன சொல்லுகிறாரோ அதைக் கீழ்ப்படிதலுடன் செய்வோம். மற்றவைகளை அவர் பார்த்துக்கொள்வார். அவரே அனைத்தையும் செய்து முடிக்க வல்லவராய் இருக்கிறார். தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் (யோபு 42:2).
ஜெபம்: எங்கள் நம்பிக்கையாகிய கர்த்தாவே, நீரே யுத்தத்தில் வல்லவர். உம்மாலேயன்றி எங்களால் எதுவும் செய்ய இயலாது. எப்படிப்பட்ட சூழ்நிலையாயினும் உம்மையேப் பற்றிக்கொள்கிறோம். ஆமென்.