பொருத்தனை ஜெபம்
தியானம்: 2026 ஆகஸ்டு 24 திங்கள் | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 11:29-40

இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பி வந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான் (நியா.11:39).
நமக்குத் தேவைகள் வரும்போது முன்பின் யோசிக்காமல் வாயைத் திறந்து ஏதாவது சொல்லிவிடுவோம். அந்த நேரத்தில் காரியம் நடந்தால் போதும் என்று எண்ணுவோம். ஆனால் தேவைகள் முடிந்ததும் நாம் சொன்னதையும் மறந்து விடுவோம். இப்படியே, ஜெபிக்கும்போதும் நாம் கர்த்தரிடமும் எதையாவது சொல்லிவிட்டு பின்னர் மறந்துவிடுவதுண்டு அல்லவா! ஆனால் இங்கே யெப்தாவின் ஜெபமோ உறுதியானதாய் இருந்தது. அவன் ஜெபிக்கும்போது யோசிக்காமல் சொல்லியிருக்கலாம். ஆனால் அவன் வெற்றி சிறந்து வந்தபோது, தேவனுடைய சந்நிதியில் சொன்ன வார்த்தையை நிறைவேற்றவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தான். அவன் குமாரத்தியோ ஒரு கன்னியாக இருந்தாள். அவள் வாழ்க்கையில் பார்க்க வேண்டிய காரியங்கள் ஏராளமாய் இருந்திருக்கலாம். ஆனாலும் அவள் தன் தகப்பன் தேவனுக்கு முன்பாக செய்த பொருத்தனையை நிறைவேற்றவேண்டும் என்பதில் அவளும் அதிக உறுதியோடு இருந்தாள். தன்னுடைய வாழ்வுக்காக இரு மாதங்கள் அவள் துக்கம் கொண்டாடிவிட்டு, திரும்பி வந்தாள். யெப்தா தனது பொருத்தனையின்படியே அவளுக்குச் செய்தான்.
பராக்கிரமசாலியான யெப்தா தனது பெலத்தை நம்பி யுத்தத்திற்குப் போகவில்லை. தேவனை நம்பியே போனான். தேவன் அமலேக்கியரைத் தன் கையில் கொடுக்காவிட்டால் தான் வெற்றிகொள்ள முடியாது என்பதை அவன் அறிந்திருந்தான். அதனால் தான் ஜெபித்து, தேவனோடு பொருத்தனையும் பண்ணி, பிற்பாடுதான் புறப்பட்டுப் போனான். நமது வாழ்விலும்கூட, நாம் நம்மால் முடியாத காரியங்களுக்குத்தான் தேவனைத் தேடி வருவோம். நம்மால் முடியும் என்று எண்ணுகிற காரியங்களில் நமது பெலத்தோடு செய்யலாம் என்று நினைத்து இறங்குவோம். பிறகு ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால், “ஆண்டவரே” என்று தேவனிடம் ஓடிவருவோம். பிரியமானவர்களே, எப்படிப்பட்ட காரியமாக இருந்தாலும், முதலில் நாம் தேவனைத் தேடுவோம். நமது உள்ளத்துக்குள் எப்பொழுதும் ஜெபமும் துதியும் இருந்துகொண்டே இருக்கவேண்டும். இடைவிடாது ஜெபிப்பது என்பது அதுவேதான். தேவனோடுள்ள உறவு என்பதுவும் அதுவேதான்.
நமக்கு ஜெபநேரம், தியானநேரம் என்று வேறுபட்ட நேரங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றைவிட எப்போதும் உள்ளத்துக்குள் ஜெபத்தால் நிறைந்திருப்போம். அப்போது வீண் சிந்தனைகள் நம்மை ஆட்கொள்ளாது. எப்போதும் தேவனின் பிரசன்னத்துக்குள் இருப்போம். அப்போது கர்த்தருக்கு நாம் செய்த பொருத்தனைகளிலும் தவற மாட்டோம். கர்த்தரிடம் ஜெபித்துவிட்டு மறந்து விடவும் மாட்டோம்.
ஜெபம்: “ஆண்டவரே, வீண் சிந்தனைகளை வெறுத்து உமது வேதத்தில் பிரியமாயிருந்து, இடைவிடாத ஜெபவாழ்வில் நாங்கள் காணப்பட எங்களுக்கு கிருபை செய்யும். ஆமென்.”