வெற்றி கர்த்தருடையதே
தியானம்: 2026 ஆகஸ்டு 25 செவ்வாய் | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 12:1-7

நீங்கள் என்னை ரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு … போனேன் (நியாயா.12:3).
யெப்தா வெற்றியடைந்து வந்ததைக் கண்ட எப்பிராயீம் மக்கள், தங்களை ஏன் யுத்தத்திற்கு அழைக்கவில்லை என்று சொல்லி யெப்தாவோடு வாக்குவாதம் செய்தனர். “அதற்கு யெப்தா: எனக்கும் என் ஜனத்திற்கும் அம்மோன்புத்திரரோடே பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கவில்லை; எனவே நான் எனது ஜீவனைக் கையிலே பிடித்துக்கொண்டு புறப்பட்டுப் போனேன்; கர்த்தரே எனக்கு ஜெயத்தைத் தந்தார்” என்று தைரியமாகச் சொல்லுகிறான்.
யெப்தா ஒரு பராக்கிரமசாலி என்று வேதம் சொல்லுகிறது. ஆனாலும் ஒவ்வொருவிசையும் யெப்தா தனது பலத்தை நம்பாமல், தேவனையே உயர்த்திப் பேசுவதைக் காண்கிறோம். யுத்தத்திற்கு போகும் முன்பும் சரி, வெற்றி கொண்டு வந்த பின்னரும் சரி, அவனது வார்த்தைகளும், அவனது நம்பிக்கையும் மாறவேயில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். யுத்தத்திற்குத் தன்னை வந்து கூப்பிட்டபோது அனைத்தையும் மிஸ்பாவிலே தேவனிடம் கூறிவிட்டுத்தான் புறப்பட்டு வந்தான். யுத்தத்திற்குப் போகும் முன்பு பொருத்தனைபண்ணி ஜெபித்தான். பின்பு யுத்தம் முடிந்ததும்கூட எப்பிராயீம் மக்கள் வந்தபோது, “கர்த்தரே வெற்றி சிறக்கச் செய்தார்” என்று சொல்கிறான்.
பரஸ்திரீயின் மகன் என்று சொல்லி தள்ளப்பட்ட நிலையில் இருந்த யெப்தாவுக்கு அந்நிலையில் இருந்து இஸ்ரவேலின் நியாயாதிபதியாக வரக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வந்ததை அவன் எண்ணிப் பார்க்கும்போது, இது கர்த்தரால் தனக்கு வந்த காரியம் என்பதை அவன் கடைசிவரைக்கும் மறக்காதவனாய் இருந்தான். அவன் அம்மோன் புத்திரரை வெற்றிகொண்டால் அவனை நியாயாதிபதியாக ஏற்றுக்கொள்வதாக சொல்லப்பட்டபோதிலும், அவன் சொன்னவர்களின் வார்த்தையை நம்பாமல் யாவற்றையும் மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் சொல்லிவிட்டுப் புறப்படுகிறான்.
தேவன்மீது உண்மையான நம்பிக்கையை வைத்து தனது பொறுப்பைத் தொடங்கிய யெப்தா, இஸ்ரவேலரை ஆறு வருடங்கள் ஆண்டுவிட்டு பின்னர் மரித்துப்போனான். நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் இதுபோன்றதான நம்பிக்கையை நாம் கர்த்தரிடத்தில் கொண்டிருக்கிறோமா என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். நம்முடைய வாழ்வில் எல்லாப் பகுதிகளிலும் நம்மை வழிநடத்த தேவன் வல்லமையுள்ளவராக இருக்கிறார் என்ற நம்பிக்கையும், உறுதியும் நமக்கு எப்போதும் மிகவும் அவசியம். மனுஷரின் பேச்சை நம்பி, நாம் வாழுகிறோமா அல்லது தேவனை உறுதியாய் பற்றியிருக்கிறோமா? இதுதான் இன்று நம்மை நாமே கேட்கவேண்டிய கேள்வி. இதற்கான பதில்தான் என்ன?
ஜெபம்: “தகப்பனே, யுத்தத்திற்கு போகுமுன்பு ஜெபித்த யெப்தா, யுத்தத்தில் வெற்றி பெற்றபின்பும் பெருமிதம்கொள்ளாமல் கர்த்தருக்கு முன் தாழ்மையாய் நடந்தாரே; நாங்களும் அவ்விதம் செயல்பட எங்களுக்கு உதவும். ஆமென்.”