நித்திரையை விட்டெழும்பு!

தியானம்: 2026 செப்டம்பர் 6 ஞாயிறு | வேத வாசிப்பு: ரோமர் 13:8-14

YouTube video

நித்திரையை விட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய் நடக்கவேண்டும் (ரோமர் 13:11).

பவுல் இந்த வார்த்தையைத் தொடருகிறார்: “நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது” (ரோமர் 13:11). இதன் அர்த்தம் என்ன? இரட்சிப்பைக் கிருபையாய் பெற்றிருக்கிற நாம், அதில் நாள்தோறும் வளர்ச்சியடைந்து, கர்த்தருடைய வருகையிலேதான் அந்த இரட்சிப்பின் பூரணத்துவத்தை அடைவோம். ஆகவேதான் பவுல். கர்த்தரின் வருகையில் நாம் பெற்றுக்கொள்ளப் போகும் ஆத்தும இரட்சிப்பு அதிக சமீபமாயிருக்கிறது என்று எழுதியுள்ளார். “உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பை அடைகிறீர்கள்” (1பேது.1:9) என்று பேதுருவும் இதைக் குறித்துக் கூறுகிறார்.

பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டபோது, நாம் கர்த்தருக்குள்ளாக விசுவாச வாழ்வை வாழ ஆரம்பிக்கிறோம். இப்போது, காலத்தை அறிந்துகொண்டு, கர்த்தரின் வருகை சமீபமாயிற்று என்பதை உணர்ந்து, இரட்சிப்பில் நிலைத்திருக்கவும், அதில் வளர்ச்சியடைந்து முதிர்ச்சி நிலையை அடையவும் நம்மை அர்ப்பணிக்கவேண்டும். ஆம், கர்த்தரின் வருகை மிக சமீபம் என்பதை காலம் நமக்கு எல்லாவிதத்திலும் உணர்த்துகிறது. அதை உணர்ந்தும், இன்னமும் அந்தகாரத்தின் கிரியைகளுக்கு இடமளித்து நமது இரட்சிப்பை இழந்து போனால், நம்மைவிட பரிதபிக்கத்தக்கவர்கள் யாரும் இருக்கமுடியாது. தம்முடைய வருகைக்கான அடையாளங்களைக்குறித்து ஆண்டவர் கூறிய ஒவ்வொரு சம்பவங்களும் நிறைவேறிக்கொண்டே வருகின்றன. ஆகவே அவரது வருகையின் காலத்தை அறிந்தவர்களாக நாம் ஆவிக்குரிய நித்திரையை விட்டெழுந்திருக்கவேண்டும். நிர்விசார நிலைகளை உதறித் தள்ளிவிட வேண்டும்.

ஆவிக்குரிய ஜீவியத்தில், நித்திரை செய்த எலியாவை நாம் அறிந்திருக்கிறோம். யேசபேலுக்கு பயந்த பயம் எலியாவுக்கு நித்திரையைக் கொண்டுவந்துவிட்டது. ஒரு ஸ்திரீயினால் தான் கொல்லப்படுவது எவ்வளவு அவமான மென்று எலியா எண்ணினான். சூரைச்செடியின் கீழ் படுத்து நித்திரை பண்ணினான். கர்த்தரிடம் கடைசி விண்ணப்பத்தை ஏறெடுக்கிறான். “போதும் காத்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்”. இன்று அநேகரின் ஜெபமும் இதுவாகத்தான் இருக்கிறது. வாழ்க்கையில் துன்பங்கள், பிரச்சனைகள், எதிர்ப்புகள் வந்ததும் அவற்றை எதிர்கொள்ள முடியாது, ஆவிக்குரிய ஜீவியத்தில் சோர்ந்து விடுகிறார்கள். நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். காலத்தை அறிந்தவர்களாக நித்திரையைவிட்டு எழுந்து, இருளின் கிரியைகளைத் தள்ளிப்போட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்வோம். பாவ இருளின் கிரியைகள் நம்மிடம் ஒட்டியிருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து, ஆவியானவர் துணையுடன் அவற்றை அழித்துவிடுவோமாக. ஆண்டவரின் வருகை சமீபமாயிற்றே!

ஜெபம்: அன்பின் பிதாவே, எங்கள் வாழ்வில் காணப்படுகிற ஆவிக்குரிய நிர்விசாரங்களிலிருந்து வெளிவர தூயஆவியானவர் உதவி செய்யும்படியாக ஜெபிக்கிறோம். ஆமென்.