யார் பாக்கியவான்!
தியானம்: 2026 செப்டம்பர் 8 செவ்வாய் | வேத வாசிப்பு: சங்கீதம் 40:1-8

கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் (எரேமியா 17:7).
“யார் பாக்கியவான்?” என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு அதிக நிச்சயத்தைத் தந்துள்ளது. அதற்கேற்றபடி நமது வாழ்வு இருக்கிறதா? இருந்தால் நாம் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனங்கள். ஏனெனில், நமது நம்பிக்கையெல்லாம் கர்த்தர் பேரிலேயே இருக்கும். கர்த்தரில் நம்பிக்கை கொண்டிருக்கிற எவரும் கலங்கத் தேவையில்லை. மனுஷர்மேல் நம்பிக்கையை வைக்கும்போது, பாடுகள், பிரச்சனைகளின் வேளையில் அவர்கள் நம்மைக் கைவிட்டு விடுவதால், கலங்கி தவிக்க நேரிடுகிறது. ஒருநாள் இரண்டு நாளல்ல, வாழ்நாள் முழுவதும் நமது நம்பிக்கையை நாம் கர்த்தர் மேலேயே வைக்க வேண்டும். மனுஷர்மீது நாம் நம்பிக்கை வைப்பது நமக்குத்தான் கஷ்டத்தைக் கொண்டுவரும். நம் மேலேயே நாம் நம்பிக்கை வைத்திருப்பதுவும் ஆபத்துத்தான், ஏனெனில் நாமும் மாறுகின்ற மனுஷர்தானே! எரேமியா கர்த்தர்மீதே முழுமையான நம்பிக்கை வைக்கும்படி நம்மை அழைக்கிறார்.
தாவீதின் அனுபவமும் இதுவாகவே இருந்தது. தாவீது, ராஜாவாக இருந்தும் கூட தன் நம்பிக்கையைத் தன்மீதோ, படைபலத்தின்மீதோ வைக்கவில்லை. தன் நம்பிக்கையை கர்த்தர்மீதே வைத்திருந்தான். “அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்.40:4) என்றும், “மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்” (சங்.118:8) என்றும் தன் அனுபவத்தைப் பாடியுள்ளார்.
வாழ்வின் போக்கிலே, நமது பெற்றோரில் நம்பிக்கை வைக்கிறோம், நண்பர்களில், ஊழியர்களில், சகோதரர்களில் நம்பிக்கை வைப்பதுமுண்டு. இது மனுஷஇயல்பு. ஆனால் அவர்கள் எவ்வளவுக்கு நம்பிக்கையை நமக்குத் தருவார்கள் என்பதே கேள்வி. ஏனெனில் எல்லோரும் மனுஷர், மாறக் கூடியவர்கள்; அதுவும் இயல்பு. ஒரு தாய்கூட தனது பிள்ளைக்கு உதவமுடியாத நிலைமை ஏற்படலாம் அல்லவா! “நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள். எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்” (ஏசா.2:22). ஆனால் கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். வாக்கில் மாறாதவர், அன்பில் மாறாதவர். அவரை நம்புகிறவர்களை அவர் ஒருபோதும் கைவிடார். நமது நம்பிக்கையை யார்மீது வைத்திருக்கிறோம்? மனிதர் மீதா? நம்முடைய அந்தஸ்தின் மீதா? ஐசுவரியத்தின் மீதா? சரீர சுகத்தின் மீதா? ஆராய்ந்து பார்ப்போம். “கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல் இருப்பார்கள்” (சங்.125:1). ஆம், கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கும்போது நாம் ஒருபோதும் அசைக்கப்பட மாட்டோம். இதை நம்மால் நம்பமுடியுமா?
ஜெபம்: எங்களை கைவிடாத தேவனே, மனிதர்கள் மீதோ, ஐசுவரியத்தின் மீதோ, அந்தஸ்தின் மீதோ எங்கள் நம்பிக்கையை வைத்திடாதபடி நீர் எங்களைக் காத்தருளும். ஆமென்.