யார் செழிப்பான்?
தியானம்: 2026 செப்டம்பர் 9 புதன் | வேத வாசிப்பு: எரேமியா 17:7-10

கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் (நீதி.28:25).
வாழ்வில் துன்ப துயரங்கள் நம்மைத் தாக்கும்போது கலங்கிப்போய், கர்த்தர் நம்மை கைவிட்டாரோ என்றுகூட நாம் தவித்துப்போகிறோம். ஆனால் ஒருகணம் அமர்ந்திருந்து, நமது வாழ்வின் போக்கைச் சிந்தித்தால், தவறு எங்கே என்பதை நிச்சயம் கண்டுகொள்ளலாம். ஏனெனில் கர்த்தருடைய வார்த்தை ஒருபோதும் தவறுவதுமில்லை, மாறுவதுமில்லை. அப்படியானால் நம்மைத்தான் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். நான் யாரை நம்பினேன்? யாரிடத்தில் என் வேதனையைப் பகிர்ந்துகொண்டேன்?
கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் துணையாகக் கொண்டிருக்கும் தேவபிள்ளையின் வாழ்க்கை எப்படி இருக்குமென்று எரேமியா வர்ணித்திருக்கிறார். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல், இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பான் (எரே.17:8). எத்தனைப் பெரிய ஆசீர்வாதம்!
அன்றாட வாழ்வில் நாம் காண்கின்ற காரியத்தையே இந்த வசனம் கூறுகிறது. தண்ணீரண்டையிலே நடப்பட்டிருக்கும் மரம், அதற்கு எப்போதும் நீர் குறைவின்றி இருப்பதால் எப்போதும் பச்சைப் பசேலென்று குளிர்மையாக இருக்கும். உஷ்ணம் எவ்வளவு அதிகரித்தாலும்கூட இந்த மரம் பாதிக்கப்பட மாட்டாது. இலைகள் காய்ந்து கருகி சோர்ந்துவிடாது. மழை குறைவான வருஷத்திலும் தன் காலத்தில் தப்பாமல் கனி கொடுத்துக்கொண்டே இருக்கும். இதன் காரணம் என்ன? கால்வாய் ஓரமாக நடப்பட்ட அதன் அடி மரம் தன் வேரை ஆழமாக ஊன்றி, நீரூற்றுடன் தன்னை இணைத்திருப்பதேயாகும். இது நமது வாழ்வுக்கும் பொருந்தும். கர்த்தருடன் ஒன்றாக இணைக்கப்பட்ட வாழ்வு வாழுவோமானால், நாமும் பச்சை மரத்தைப்போலவே காணப்படுவோம். பச்சை மரம் களைப்படைந்தவர்களின் களைப்பை நீக்கி, குளிர்மையான நிழலைக் கொடுக்கும்; அவர்களை ஆறுதல்படுத்தும். அதுபோலவே, உலக பாரங்கள், தொல்லைகளினால் இளைப்படைந்து சோர்ந்துபோயிருக்கின்ற ஜனங்கள் வந்து இளைப்பாறுதலைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக நமது வாழ்க்கை மாறும். துன்பம், வியாதிபோன்ற வறட்சியான காலம் நம் வாழ்க்கையில் வந்தாலும்கூட, நாம் மற்றவர்கள் மத்தியில் கனிகொடுக்கக்கூடியவர்களாக விளங்குவோம்.
இன்று நமது வாழ்வு எப்படி இருக்கிறது? கனிதரும் வாழ்வாக இருக்கிறதா? அல்லது வறண்டிருக்குமானால் இன்றே, கர்த்தரை நம்பி அவர் கரத்தில் நம்முடையது யாவையும் ஒப்புக்கொடுத்து, நமது வழிகளைச் சரிசெய்து கொள்வோமாக. “அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்” (ஏசா.61:3). இப்படியிருக்க நாம் ஏன் வீணாக காய்ந்து போகவேண்டும்?
ஜெபம்: ஆண்டவரே, துன்ப துயரம் போன்ற வறட்சியான நாட்களிலும் தப்பாமல் கனி கொடுக்க, கர்த்தரையே நம்பிக்கையாகக் கொண்டு வாழ எங்களுக்குதவும். ஆமென்.