வேறே பாண்டமாக…!
தியானம்: 2026 செப்டம்பர் 11 வெள்ளி | வேத வாசிப்பு: எரேமியா 18:1-11

குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப் போயிற்று … அதைத் திருத்தமாய் … வேறே பாண்டமாக வனைந்தான் (எரேமியா 18:4).
ஒரு அழகான மண்பாண்டத்தை உருவாக்க, அந்தக் களிமண்ணின் சொந்தக்காரன் அநேக வழிமுறைகளுக்கூடாகச் செல்லவேண்டும். சாதாரண களிமண், அது பாத்திரமாக வனையப்பட்டு, சூளைக்குள் இடப்பட்டு, சுடப்பட்டு வெளிவரும்போதுதான் அது உபயோகமான பாத்திரமாக இருக்கும். ஆனால், கஷ்டப்பட்டு தன் கைகளினால் வனைந்து கொண்டிருந்த மண்பாண்டம் தன் கையிலே கெட்டுப்போய்விட்டால் அந்தக் குயவன் மனம் எவ்வளவு வேதனைப்படும். இவ்வளவுநேரம் அவனது கடின உளைப்பு வீணாய்ப் போனதுபோல இருக்காதா? அதற்காக அவன் கோபம்கொண்டு அந்தக் களிமண் உருண்டையை எறிந்துவிடுவானா? ஒருபோதும் இல்லை. வழிமுறைகளை மறுபடியும் ஆரம்பித்து, தனது பார்வைக்குச் சரியாய் கண்டபடி அதை திரும்ப வேறே பாண்டமாக வனைகிறான்.
ஆம், பரம குயவனாகிய கர்த்தரும் தம் பிள்ளைகளாகிய நம்மைத் தமக்கேற்ற பாத்திரங்களாக உருவாக்கி எடுக்கவே விரும்புகிறார். வேதனைகள் உபத்திரவங்களுக்கூடாக நம்மை வனைந்துக்கொண்டே வருகிறார். சிலசமயம் நமது முரட்டாட்டமான சுபாவங்கள், மாம்ச இச்சைகள், கர்த்தர் தமது சித்தப்படி நம்மை வனைய முடியாதபடி தடையாகிவிடுகிறது. இதனால் கர்த்தருக்கு உகந்த பாத்திரங்களாக இல்லாமல், உதவாத கெட்டுப்போன பாத்திரங்களாகி விடுகிறோம்.
தாவீது, பாவஞ்செய்தபோது, “உடைந்த பாத்திரத்தைப் போலானேன்” (சங்.31:12) என்று கதறினார். பாவங்களை உணர்ந்து மனஸ்தாபப்பட்டார். கர்த்தர் அவரைப் புறக்கணித்துவிடவில்லை; தமக்கேற்ற பாத்திரமாக மீண்டும் வனைந்தெடுத்தார். பேதுரு ஆண்டவரை மறுதலித்தபோது, அவர் ஒரு உடைந்த பாத்திரம் போலானார். ஆனால், அவர் மனங்கசந்து அழுதபோது ஆண்டவர் மீண்டும் அவரை வனைந்தெடுத்தார். “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்று பெரிய பொறுப்பையும் கொடுத்தார். ஆம் ஆண்டவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும் இருக்கிறவர். இன்று நம்மில் சிலரது வாழ்வு உடைந்த பாத்திரம்போல இருக்கலாம். உடைந்தாலும் கர்த்தரின் கரத்தில் இருக்கிறோமா என்பதை சிந்திப்போம்.
நொறுக்கும், உருக்கும், உடையும், வனையும்,
உமக்கே உகந்த தூய சரீரமாய்! ஐம்பொறிகளையும்
உமக்குள் அடக்கும் இயேசுவே, ஆவியால் நிரப்பும்!
என்று ஜெபித்து பரம குயவன் கைகளில் நம்மை ஒப்படைப்போமா! நிச்சயமாகவே கர்த்தர் தாமே தமக்கு உகந்த பாத்திரமாக நம்மை வனைந்தெடுத்து உபயோகிப்பார்.
ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, உடைந்த பாத்திரம்போல் இருக்கும் எங்கள் வாழ்வை உகந்த பாண்டமாய் உருவாக்கப்பட உமது கரத்தில் தருகிறோம். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.”